சத்துணவு முட்டைகளை வாங்கிப் பயன்படுத்திய உணவகத்துக்கு சீல்

பள்ளிக்குழந்தைகளுக்காக சத்துணவில் வழங்கப்படும் முட்டைகளை உணவகத்துக்கு விற்பனை செய்த சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

Sep 19, 2024 - 19:43
சத்துணவு முட்டைகளை வாங்கிப் பயன்படுத்திய உணவகத்துக்கு சீல்
egg

திருச்சி மாவட்டம் துறையூரில் இயங்கி வரும் தனியார் உணவத்தில் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவு முட்டைகள் பயன்படுத்த நிலையில் அதனை விற்பனை செய்த சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, அந்த உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது. 

துறையூரிலிருந்து திருச்சி செல்கிற சாலையில் பிரபல தனியார் உணவகம் ஒன்று இயங்கி வந்தது. இந்த உணவகத்தில் தமிழக அரசின் முத்திரை பதிக்கப்பட்ட சத்துணவு முட்டைகளைக் கொண்டு சமைக்கப்படுவதை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளங்களிலும் நன்றாகப் பரவியது. பள்ளி மாணவர்களுக்காக இலவசமாக வழங்கப்படும் சத்துணவு முட்டைகளைக் கொண்டு ஆமெலெட், ஆப் பாயில் போன்றவற்றை சமைத்து விற்பனை செய்து அந்த உணவகம் இலாபம் பார்த்து வந்தது பலரையும் வேதனைப்பட வைத்தது. 

இந்நிலையில் இது குறித்துத் தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் துறையூரில் உள்ள தனியார் உணவகங்களுக்கு நேரில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து துறையூரில் தனியார் உணவத்திற்கு அரசுப் பள்ளி குழந்தைகளுக்கான முட்டைகளை விற்பனை செய்ததாக மதுராபுரி சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி கைது செய்யப்பட்டு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். 

அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவுக்காக வழங்கப்படும் சத்துணவு முட்டைகளை வாங்கி பயன்படுத்திய உணவகத்திற்கு வட்டாட்சியர் தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும் உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow