முதலமைச்சர பார்க்க விட மாட்றாங்க... கிளாம்பாக்கத்தில் விவசாயிகள் இரவில் தர்ணா!
பெண்கள் ஒரு சிலர், பேருந்து நிலைய நுழைவு வாயிலில் இருந்த கலைஞர் சிலை முன்பு மனுக்களை வைத்து முறையிட்டனர்
சென்னையில் முதலமைச்சரை பார்த்து மனு அளிக்க வந்த திருவண்ணாமலை விவசாயிகளை, காவலர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்து ஊருக்கு அனுப்பி வைக்க முயன்ற நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போலீசாருக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் திட்டத்திற்கு 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கியது. இதை எதிர்த்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியல், நடைபயணம், கறுப்பு கொடி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, தொடர் அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சட்டமன்றத்தில் உரையாற்றியபோது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு குண்டர் சட்டத்தில் கைதான விவசாயிகள் அனைவரும் விவசாயிகளே இல்லை, அவர்களுக்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லை என பேசினார். இதை எதிர்த்து விவசாய நிலங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதன்படி அமைச்சர் எ.வ வேலுவை பதவி நீக்கம் செய்யக் கோரி விவசாயிகள், முதல்வரை சந்திக்க சென்னை தலைமைச் செயலகம் சென்றுள்ளனர்.
அப்போது, பெண்கள் உள்பட 23 பேரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கைது செய்து, சென்னையில் தனியார் மண்டபத்தில் வைத்து விட்டுப் பின்னர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். இந்த நிலையில் அவர்களை விடுவித்து அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு இரவு அழைத்து வரப்பட்டனர்.
அங்கு, காவல்துறையைக் கண்டித்து விவசாயிகள் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் ஒரு சிலர், பேருந்து நிலைய நுழைவு வாயிலில் இருந்த கலைஞர் சிலை முன்பு மனுக்களை வைத்து முறையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
What's Your Reaction?