கடத்தல் தங்கம்.. சென்னையில் "குருவியை" கடத்தி சித்ரவதை செய்த கும்பல்... 2 பேரை தேடும் போலீஸ்

Apr 8, 2024 - 13:18
கடத்தல் தங்கம்.. சென்னையில் "குருவியை" கடத்தி சித்ரவதை செய்த கும்பல்... 2 பேரை தேடும் போலீஸ்

வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தைக் கொடுக்காத குருவியை, கடத்திச் சென்று தனி அறையில் வைத்து சித்ரவதை செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சுக்கூர். இவர் சென்னையைச் சேர்ந்த அர்ஷத் ஜாசிம் என்பவரிடம் குருவியாக வேலை செய்து வந்தார். வெளிநாட்டிலிருந்து விலை உயர்ந்த பொருட்கள், தங்ககட்டிகளை சென்னைக்கு கடத்தி வந்துள்ளார். 

அர்ஷத் ஜாசிமிடமிருந்து ரூ.20 லட்சம் பெற்றுக்கொண்டு அப்துல் சுக்கூர் துபாய்க்கு சென்று வந்தார். சென்னை திரும்பிய அவர் அர்ஷத் ஜாசிமிடம் வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை  கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. குருவியான அப்துல் சுக்கூர் தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டார்.

அதனால் கோபமடைந்த அர்ஷத் ஜாசிம், தனது கார் ஓட்டுனர் குணா உள்ளிட்ட சிலரோடு புதுக்கோட்டை சென்று அப்துல் சுக்கூரை காரில் கடத்தி சென்னைக்கு கொண்டு வந்தனர். சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். 

மேலும் அப்துல் சுக்கூரின் மனைவி மும்தாஜ் பேகத்திடம் போனில் பேசி கணவரை கடத்தி விட்டோம் என்றும் ரூ. 3 கோடி கொடுத்தால் தான் விடுவோம் என்று மிரட்டியதாக தெரிகிறது. அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக புதுக்கோட்டை மீமிசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், இந்தச் சம்பவம் சென்னையில் நடந்ததால் சென்னையில் புகார் கொடுக்கும்படி போலீசார் அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து மும்தாஜ் பேகம் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் புகார் குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில்  அப்துல் சுக்கூரை கடத்தியவர்களைச் சந்திக்கச் சென்ற அவரது உறவினரான ஹபீப் ரகுமானையும் கடத்தல் கும்பல் பிடித்து வைத்து கொண்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. 

போலீசார் விசாரணை செய்து, திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து இருந்த அப்துல் சுக்கூரை பத்திரமாக மீட்டனர். மேலும் அவரது உறவினர் ஹபீப் ரகுமானையும் மீட்டனர். சித்ரவதையால் அப்துல் சுக்கூர் படுகாயமடைந்து இருந்தார். அவரை போலீசார் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இரண்டு பேரையும் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அறையில் சுமார் ரூ.4 லட்சம் வெளிநாட்டு பணம், போலியான ஆதார் கார்டுகள், ஆதார் அச்சிடும் மிஷின்,  செல்போன்கள், கலர் பிரிண்டர், பணம் எண்ணும் மிஷின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த அறையைப் பூட்டி சீல் வைத்த காவல்துறையினர் தப்பி ஓடிய முகமது அர்ஷத் ஜாசிம், அமீன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow