அதிரடி ரெய்டு... 2 நாட்களில் 6 சாமி சிலைகள் மீட்பு... 11 பேர் கைது...
தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினரால் கடந்த இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 6 சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
நெல்லை சரக சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளருக்கு கிடைத்த தகவலின் பேரில் மதுரை மாவட்டம் விளாங்குடி செம்பருத்தி நகரில் பிலோமின்ராஜ் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு ஒரு விநாயகர் சிலை கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் திண்டுக்கல் சரக சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளருக்கு கிடைத்த தகவலின் பேரில் புதுக்கோட்டை ஆலத்தூர் சந்திப்பில் நடத்தப்பட்ட வாகன தணிக்கையின்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் இருந்து பழமையான அம்மன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் சரக காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படையினர் புலிச்சப்பள்ளம் என்ற இடத்தில் செல்வகுமார் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது 3 பெருமாள் சிலைகள், ஒரு அனுமன் சிலை மற்றும் திருவாச்சி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறாக கடந்த 2 நாட்களில் சிலை கடத்தல் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 6 சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
What's Your Reaction?