"பெரும் பணக்காரர்களுக்கு மோடி தள்ளுபடி செய்த கடன் தொகையை வசூலித்து, மக்களுக்கு பகிர்ந்தளிப்பேன்" - ராகுல்காந்தி பரபரப்பு பேச்சு...
பிரதமர் மோடியின் பேச்சுக்கு ராகுல் காந்தி விமர்சனம்
தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி தள்ளுபடி செய்த ரூ.16 லட்சம் கோடியை மீட்டு, 90% மக்களுக்கு பகிர்ந்தளிப்பேன் என, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் சொத்துகளையும், தங்கத்தையும் கணக்கெடுத்து, அவற்றை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சமூகத்தினருக்கு பகிர்ந்து அளிக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது என்று பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சு, வெறுப்பை தூண்டும் விதமாக இருப்பதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதோடு நில்லாமல், மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி பதிலளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “காங்கிரஸ் கட்சியின் புரட்சிகரமான தேர்தல் அறிக்கையை பார்த்து பாஜக அச்சம்டைந்துள்ளது” என கூறினார்.
மேலும், பிரதமர் மோடி தனது பணக்கார நண்பர்களுக்கு வழங்கிய 16 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளார். இவ்வளவு பணத்தில் 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டிற்கு 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கலாம்.
1 லட்சம் சம்பளத்தில் 16 கோடி பெண்களுக்கு வேலை கிடைத்திருக்கலாம். அவ்வாறு நடைபெற்றால் அவர்களின் வாழ்க்கை மாறி இருக்கலாம். 10 கோடி விவசாய குடும்பங்களில் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு எண்ணற்ற தற்கொலைகளை தடுத்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, இண்டியா கூட்டணி வெற்றி பெற்றதும், பிரதமர் மோடியின் நண்பர்களிடம் இருந்து பணம் மீட்கப்பட்டு, 90% மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றும், நாட்டில் உள்ள 90 சதவீத மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடன், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், அதை யாராலும் தடுக்க முடியாது எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
What's Your Reaction?