கடைகளை சூறையாடி தாக்குதல்.. சாலையில் சென்றவர் மீது கல்வீச்சு போதை ஆசாமிகள் அட்டூழியம் - CCTV வெளியீடு
மதுரையில் வேலை முடிந்து சிவனேனு சென்ற நபரை, கஞ்சாபோதையில் கொடூரமாக தாக்கிய இளைஞர்கள், அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கிவிட்டு சென்ற பரபரப்பு சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
மதுரையில் ஒருபக்கம் சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், மறுபக்கம் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மோதலில் சுமார் 23 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சிடைய வைத்துள்ளது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் கான் முகமது. இவர் நேற்று இரவு வேலை முடித்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அங்கு கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் சிலர் அவருடன் தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால், வாகனத்தில் இருந்து இறங்கிய கான் முகமது, அவர்களை தட்டிக்கேட்டுள்ளார். தொடர்ந்து ஆத்திரமடைந்த அந்த போதை இளைஞர்கள் ஒன்றுகூடி, கான் முகமது மீது ஹலோ ப்ளாக் கல்லை எறிந்து கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவரவே, அந்த போதை கும்பல் தப்பியோடி உள்ளது. இதையடுத்து காயமடைந்த இளைஞரை மீட்ட அப்பகுதியினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய அந்த போதை கும்பல், அதே பகுதியில் உள்ள ஐஸ்க்ரீம் கடை, பேன்சி ஸ்டோர், டீக்கடை உள்ளிட்டவற்றிலும் தகராறு செய்ததோடு, பல நூறு ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றதாக வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அத்துடன் அதனை தட்டிக்கேட்டவர்களையும் ஆபாச வார்த்தைகளால் வசைப்பாடி விட்டுச்சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில், கஞ்சா போதையில் இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?