ரஷிய அதிபர் புதினை சந்திக்க ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு
இந்தியாவிற்கு வருகைதரும் ரஷிய அதிபர் புதினை சந்திக்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
ரஷிய அதிபர் புதின் இரண்டு நாள் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார். (டிச. 5) காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிதது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வரவேற்கவுள்ளார்.
பின்னர், காலை 11.30 மணிக்கு அதிபர் புதின், இந்தியத் தலைவர்களின் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தவுள்ளார். காலை 11.50 மணியளவில் ஹைதராபாத் இல்லத்துக்குச் செல்லும் புதினை பிரதமர் மோடி வரவேற்கிறார். அங்கு இரு தலைவர்கள், இரு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் 23-ஆவது ஆண்டு மாநாடு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், அதிபர் புதினை சந்திக்க எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் : வெளிநாட்டுத் தலைவர்களை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்துப் பேசுவது மரபாக இருந்து வந்தது. முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சிக் காலங்களிலும் இது கடைப்பிடிக்கப்பட்டது.
ஆனால், தற்போது வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தரும்போதும் அல்லது நான் வெளிநாடு செல்லும்போதும், எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்துகிறது. அரசு மட்டுமே இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. நாங்கள் இணைந்துதான்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திப்பதை அரசு விரும்புவதில்லை. இந்தியா வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை, பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சகமும் எதிர்க்கட்சிகளிடமிருந்து விலக்கியே வைத்துள்ளது. இதற்கு போதிய பாதுகாப்பின்மையே காரணம். என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
What's Your Reaction?

