"காங்கிரசுக்கு வாக்களிக்க கூடாது; திமுக என்பது திருடர்கள் முன்னேற்றக் கழகம்" - வெளுத்து வாங்கிய சீமான்...
நம் பரம்பரை சொத்தான கச்சத்தீவை தான்தோன்றித் தனமாக இலங்கைக்கு கொடுத்து மீனவர்களின் வாழ்வை பறித்த காங்கிரசுக்கு வாக்களிக்க கூடாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் களம் அனல் பறக்கிறது. புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 8) சேலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் பங்கேற்றார். சேலத்தில் போட்டியிடும் மருத்துவர் மனோஜ் குமார் மற்றும் தருமபுரியில் போட்டியிடும் மருத்துவர் அபிநயா பொன்னிவளவனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது மக்களிடையே சீமான் பேசியதாவது, "கச்சத்தீவு நம் பரம்பரை சொத்து. அதை எந்தவொரு விவாதமும் இல்லாமல் நம் இனப் பகைவனான இலங்கைக்கு தான்தோன்றித் தனமாக கொடுத்து மீனவர்கள் வாழ்வுரிமையை பறித்தது காங்கிரஸ் கட்சி. அதற்காக காங்கிரசுக்கு வாக்களிக்க கூடாது. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியது காங்கிரஸ். அதனைத் தடுக்காமல் ஆட்சி பறிபோய்விடும் என்ற பயத்தில் இருந்தது திமுக. அற்ப பதவிக்காக நம் உரிமையை விட்டுக் கொடுத்த திமுகவிற்கு வாக்களிக்கக் கூடாது" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய சீமான், "தேர்தலை சாதாரணமாக கடந்து போகக்கூடாது. திமுகவிற்கு அதிமுகவிற்கும் உள்ள வித்தியாசம் என்பது அதிமுக கொடியில் அண்ணா படம் இருக்கும் திமுக கொடியில் இருக்காது. திமுக என்பது திருடர்கள் முன்னேற்றக் கழகம். அதிமுக என்பது அனைத்து இந்திய திருடர்கள் முன்னேற்றக் கழகம். திராவிடம் என்றால் தமிழர்கள் அல்லாதோர் வசதியாக வாழ்வதற்கும், ஆள்வதற்கும் கொண்டு வரப்பட்டது" என விமர்சனம் செய்தார்.
What's Your Reaction?