ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மாயம்.. அதிரடி நடவடிக்கை எடுத்த ராமநாதபுரம் சமஸ்தானம்...
நகைப் பெட்டிகளின் சாவியைப் பராமரித்து வந்த ஸ்தானிகர் சீனிவாசனிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்!
ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில், ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் திருடுபோனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் உள்ள மூலவருக்கும், தாயாருக்கும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி, முத்து, பவளம் உள்ளிட்ட ஆபரணங்கள் அலங்காரத்திற்காக அணிவிக்கப்படும். இவை அனைத்தும் கோயிலில் உள்ள பாதுகாப்புப் பெட்டகம் மற்றும் ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள அறங்காவலர் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பெட்டகத்தின் சாவியை கோயில் பரம்பரை ஸ்தானிகர் வைத்திருப்பது வழக்கம்.
இந்நிலையில், சமஸ்தான தேவஸ்தானத்தின் திவானும், நிர்வாக செயலாளருமான பழனிவேல் பாண்டியன் நகைகளை ஆய்வு செய்தபோது, ஆவணத்தில் இருந்த சில தங்க நகைகள் பெட்டகத்தில் இல்லாதது தெரிய வந்தது. உடனே அரண்மனைப் பெட்டகத்திலும் ஆய்வு செய்யப்பட்டது. அதிலிருந்தும் சில நகைகள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. அதன்படி, மொத்த நகைகள் கணக்கெடுப்பில், 952 கிராம் தங்க நகைகள், 2,400 கிராம் வெள்ளி நகைகள் என ரூ.1 கோடி மதிப்புள்ள பாரம்பரிய நகைகள் மாயமானது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த திவான், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷிடம் புகாரளித்தார். இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நகைகள் இருந்த பெட்டகங்களின் சாவியைப் பராமரித்து வந்த ஸ்தானிகர் சீனிவாசனிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனால் அவரை ராமநாதபுரம் அரண்மனை தேவஸ்தான் தற்காலிக பதவிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?