புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்! பிரதமர் தலைமையிலான குழு அறிவிப்பு... யார் யார் தெரியுமா?
அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் இருவரும் ஆணையர் பதவி விலகியதால், காலியாக உள்ள பதவிகளுக்கு நியமனம் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் 2 புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்பிர்சிங் சந்து மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோரை நியமித்து, பிரதமர் மோடி தலைமையிலான குழு அறிவித்துள்ளது.
கடந்தாண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பரிந்துரைக்கும் ஏதேனும் ஓர் அமைச்சர் இடம்பெறுவார் என்று கூறப்பட்டது. அதனடிப்படையில் நியமனக் குழுவும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தில், அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகிய இருவரும் ஆணையர் பதவியிலிருந்து விலகினர். இதையடுத்து, மக்களவைத் தேர்தலும் நெருங்கிவரும் நிலையில், காலியாகவுள்ள ஆணையர் பதவிகளுக்கு நியமனம் செய்ய, தேர்தல் ஆணையர் நியமனக் குழு கூடியது. அதில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.
நியமனக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளார்களைச் சந்தித்த ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, சுக்பிர்சிங் சந்து மற்றும் ஞானேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். அப்போது, இந்தக் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று கூறிய அவர், தமக்கு முந்தையநாள் இரவில்தான் 212 பெயர்களை அனுப்பி வைத்து, அதிலிருந்து தேர்ந்தெடுக்கச் சொன்னதாகவும், அப்போது ஒருநாளில் எப்படி ஆணையர்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று தாம் கேள்வி எழுப்பியதாகவும் கூறினார். இந்த நியமனக் குழுவே பெயரளவில்தான் நடத்தப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
What's Your Reaction?