மாரடைப்பால் உயிரிழந்த விவசாயி... கண்ணீர் புகைக்குண்டு தான் காரணம்..! பகீர் புகார் கூறும் உறவினர்கள்..!
பஞ்சாப் எல்லை அருகே டெல்லி சலோ போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், போலீசார் வீசிய கண்ணீர் புகைக் குண்டுகளே மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வேளான் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும், விவசாயி-விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி விவசாயிகள் படையெடுத்துள்ளனர். தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானில் இருந்து டிராக்டர்கள், வாகனங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், கண்ணீர் புகைக்குண்டுகள், முள்வேலிகள், சாலைத்தடுப்புகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாபைச் சேர்ந்த KMSC விவசாய சங்கத்தின் உறுப்பினரான 65 வயது விவசாயி கியான் சிங் என்பவர் திடீரென மூச்சுவிட சிரமப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிறிய தள்ளுவண்டி மூலம் போராட்டத்தில் பங்கேற்ற கியான் சிங், 13ம் தேதி டெல்லி போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதில் இருந்து சுவாசிக்க தொடர்ந்து சிரமப்பட்டு வந்ததாக அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். பஞ்சாப்பில் திருமணம் செய்யாமல் வசித்து வந்த கியான் சிங், ஒன்றரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்வாதாரத்துடன் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?