பனையை பிடுங்கி எரியும் அரசு நிர்வாகம்..! கற்பக விருட்சத்தை காக்க ஆளில்லை... கொந்தளிக்கும் இயற்கை ஆர்வலர்கள்
தஞ்சாவூர் அருகே, சாலை விரிவாக்கப் பணி என்ற பெயரில், கொத்து கொத்தாக நுங்குகள் காய்த்துத் தொங்கும் எண்ணற்ற பனை மரங்களை, துண்டு துண்டாக வெட்டி வீசியுள்ளனர், நெடுஞ்சாலைத் துறையினர். பல வகைகளில் பயன் தந்து, இயற்கையின் அரணாக விளங்கும் பனை மரங்களை பாதுகாப்பதை விட்டுவிட்டு, அவற்றை வெட்டி வீழ்த்துவது, பூமியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்வதாக இயற்கை ஆர்வலர்கள் கொந்தளித்து வருகின்றனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்... இந்த செய்தி தொகுப்பில்...
கத்திரி தொடங்கியுள்ள நிலையில், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து, வரலாறு காணாத வெப்ப அலை வீசி வருகிறது. மரத்தை வெட்டுவதால் தான் சூரியன் இப்படி சுட்டெரிக்கிறது, அதனால் மரம் நடுங்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரம், மற்ற மரங்களை விட பனை மரங்களால் பல நன்மைகள் உள்ளதால், அவற்றைப் பாதுகாக்க பலரும் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே, சாலை விரிவாக்கப் பணிக்காக எண்ணற்ற பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு வருகின்றன. கொத்துக் கொத்தாக கிடந்த நுங்குகளுடன் பனை மரங்கள் வெட்டப்பட்டு வீழ்வதைப் பார்க்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு இதயம் வலிக்கத்தான் செய்கிறது.
பனை மரங்களின் வேர்கள், மிக ஆழத்தில் இருக்கும் தண்ணீரைக் கூட மேலே கொண்டு வந்துவிடும். மண் அரிப்பை தடுத்து, அசுத்தமான தண்ணீரை சுத்திகரிப்பு செய்வது போன்ற பல உன்னதமான பணிகளையும் பனை மரங்கள் செய்து வருகின்றன. வேரின் பயன் இப்படி இருக்க, மரத்தின் மூலம் நுங்கு, பதநீர், வெள்ளம் என அள்ளிக்கொடுத்து, மட்டைகள் மூலமாக நமக்கு விசிறிகளையும் வழங்குகிறது பனை மரங்கள். இதனால்தான், நம் முன்னோர்கள் நீர்நிலைகளின் ஓரங்களில் பனை மரங்களை வளர்த்து பாதுகாத்தனர்.
இதனிடையே, சாலை விரிவாக்கத்திற்காக, சீசன் நேரத்தில் காய்த்த நுங்குகளுடன் பனைமரங்களை வெட்டியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இயற்கை ஆர்வலர் ஜீவக்குமார், அத்தனை ஜீவன்களும் வெயிலால் வெந்து கொண்டிருக்கும்போது, மரங்கள் வெட்டப்படுவதாக ஆதங்கத்துடன் கூறினார். எங்களுக்கு நிவாரணம் வேண்டாம். ஆனால், மழை வேண்டும், மரம் வேண்டும், ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன்பு 5 மரங்களை நடுங்கள் என ஜீவக்குமார் தெரிவித்துள்ளார்.
பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதியைக் கட்டாயம் பெற வேண்டும் என கடந்தாண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த சூழலில், தஞ்சாவூரில் சாலை விரிவாக்கப் பணிக்காக பனை மரங்கள் வெட்டப்பட்டதற்கு அனுமதி பெறப்பட்டதா? என விசாரணை நடத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், மரங்களின் அவசியத்தை புரிந்து கொண்டு, அவற்றை வெட்டாமல் சாலை அமைக்கும் முயற்சியை பல நாடுகள் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றன. அதுபோல, தமிழ்நாடு அரசும் இந்த முயற்சியை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?