பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..

Mar 25, 2024 - 17:57
பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டின் பிரதானக் கட்சி வேட்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்று முதல் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வரும் நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று (25-03-2024) முதல் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யத் தொடங்கினர்.

அந்த வகையில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பருத்தி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் பஞ்சு தொழிற்சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.

இதேபோல் சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் அடுத்தடுத்து தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்புமனுவை தாக்கல் செய்ய அதிமுக வேட்பாளர் விக்னேஷ் வருகை தந்தார். அப்போது உடன் வந்த மாற்று வேட்பாளர் ப்ரியாவை காவல்துறையினர் உள்ளே அனுமதிக்காததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாற்று வேட்பாளர் என்பது தெரியாமல் தடுத்து நிறுத்தியதாக காவல்துறையினர் விளக்கமளித்தனர். இதைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிடும் டி.எம்.செல்வகணபதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி வேட்புமனுவை தாக்கல் செய்தார். திருவள்ளூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் முதல் ஆளாக நல்லதம்பி வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow