அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு அரசுப்பேருந்தில் கஞ்சாவைக் கடத்தி வந்த நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலத்தில் இருந்து அரசுப் பேருந்துகளில் கஞ்சாவைக் கடத்தி வந்து பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் வந்திருக்கிறது. இந்தப் புகாரை அடுத்து நேற்று மாலை பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய போலீசார், கோபாலபுரத்தில் உள்ள சோதனை சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
பேருந்துகளில் பயணிகளிடமும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வந்த அரசுப் பேருந்தில் ஏறி சோதனையிட்ட போது, பேருந்தினுள் சந்தேகத்துக்கிடமாக வந்த ஒரு நபரை பிடித்து அவரிடம் சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த நபர் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது அந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் கடத்தி வந்தது மொத்தம் இரண்டு கிலோ கஞ்சாவையும் காவல் துறையினர் பறிமுதல் செய்த பிறகு அந்நபரை விசாரித்தனர். அவர் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த முகமது சபீர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவர் கேரளாவில் இருந்து கஞ்சாவைக் கொண்டு வந்து பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சபீரைக் கைது செய்த காவல் துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
What's Your Reaction?