ஜாபர் சாதிக்கின் குரல் மாதிரியை எடுக்க அனுமதி... செல்போன் பேச்சை வைத்து NCB போடும் பக்கா ப்ளான்
ஜாபர் சாதிக் உட்பட 5 பேருக்கு ஏப்ரல் 16-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டிப்பு.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் குரல் மாதிரியை எடுத்து ஆய்வு செய்ய மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லியில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரித்ததில், போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக இருந்தது திமுக முன்னாள் நிர்வாகியும் தமிழ் சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை தீவிரமாக தேடி வந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், டெல்லியில் கடந்த மார்ச் 9-ம் தேதி அவரை கைது செய்து திஹார் சிறையில் அடைத்தனர். மேலும், ஜாபர் சாதிக்கின் செல்போனை ஆய்வு செய்து சில ஆடியோ உரையாடல்களை கைப்பற்றி உள்ளனர்.
இந்த நிலையில் ஆடியோ உரையாடல்களை ஆய்வு செய்யவும், ஜாபர் சாதிக்கின் குரல் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யவும் அனுமதி வழங்க வேண்டும் என டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்திடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து ஜாபர் சாதிக்கின் குரல் மாதிரியை பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
அதன் அடிப்படையில் இந்த வாரத்தில் குரல் மாதிரியை பதிவு செய்ய மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே, ஜாபர் சாதிக் உட்பட 5 பேருக்கும் ஏப்ரல் 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரது செல்போன் ஆடியோ உரையாடல்கள் மூலம், கடத்தலில் தொடர்புடைய முக்கிய தலைகள் யார்? என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?