சமாஜ்வாதி தலைமைக் கொறடா ராஜினாமா...கோவத்தில் கொந்தளித்த அகிலேஷ் யாதவ் !!
தேர்தல் வெற்றிக்காக பாஜக அனைத்து உக்திகளையும் பயன்படுத்துவதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவைத் தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் கட்சியின் தலைமைக் கொறடா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தனிப்பட்ட ஆதாயங்களை விரும்புவோர் பாஜகவுக்கு செல்லலாம் என சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் 10 இடங்கள், கர்நாடகாவில் 4 இடங்கள், இமாசலப்பிரதேசத்தில் ஒரு இடம் என மொத்தம்15 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 10 இடங்களில் 7 இடங்களில் பாஜக எளிதாகக் கைப்பற்றும் என ஏற்கனவே கணிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3-ஐ சமாஜ்வாதி கைப்பற்றுமா என கேள்வியெழுந்துள்ளது.
தொடர்ந்து முன்னதாக சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் அளித்த இரவு விருந்தில், தனது சொந்தக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 8 பேர் பங்கேற்காததாகத் தெரிகிறது. தொடர்ந்து தங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் மீது பாஜகவினர் அழுத்தத்தை கொடுப்பதாகவும், இதனால் சிலர் கட்சி மாறி வாக்களிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார். அச்சத்தை ஏற்படுத்தி மிரட்டல் விடுத்து பழைய வழக்குகளை சுட்டிக்காட்டி அச்சுறுத்தும் பாஜக, விசாரணை அமைப்புகளை ஏவி விடுவதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ மனோஜ் குமார் பாண்டே, கட்சியின் தலைமைக் கொறடா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தொடர்ந்து தேர்தல் தொடர்பாக மீண்டும் பேட்டியளித்த அகிலேஷ் யாதவ், தனது கட்சியின் 3 வேட்பாளர்களும் உறுதியாக வெற்றிபெறுவர் எனக்கூறினார். தேர்தல் வெற்றிக்காக பாஜக அனைத்து உக்திகளையும் பயன்படுத்தும் எனவும் தனிப்பட்ட லாபத்தை விரும்பும் தங்கள் தலைவர்கள் பாஜகவுக்கு செல்லலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
What's Your Reaction?