எலி இருந்தா என்ன? நீங்க தண்ணீ குடிக்கவேண்டியது தானே?..அலட்சியம் காட்டும் ஆவடி மாநகராட்சி...
குடிநீர் சேமிக்கும் பகுதியில் எலி அலைந்து திரிவதால் இந்த நீரைப் பருகுவோருக்கு நோய்த் தொற்று பரவும் அபாயமும் எழுந்துள்ளது.
ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் தாகம் தீர்க்க அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் உள்ளே எலிகள் சுற்றித் திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வரி செலுத்த உள்ளிட்ட பணிகளுக்காக வந்து செல்கின்றனர். மாநகராட்சி பணிகளை மேற்கொள்ளும் வகையில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்குத் தாகம் தீர்க்கும் வகையில் சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குடிநீர் சுத்திகரிப்பு டேங்க் முற்றிலும் சுகாதாரமற்ற நிலையில் இருந்து வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் குடிநீர் இயந்திரத்தின் உள்ளே மேல் பகுதியில் எலிகள் சுற்றித் திரிந்து வருகின்றன. மேலும் இவை குடிநீர் சேமிக்கும் பகுதியில் அலைந்து திரிவதால் இந்த நீரைப் பருகுவோருக்கு நோய்த் தொற்று பரவும் அபாயமும் எழுந்துள்ளது.
இதே போன்று அலுவலகத்தின் வெளிப்புற பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் முழுவதுமாக உபயோகமற்ற நிலையில் இருந்து வருகிறது. கோடைக் காலம் நெருங்குவதை கருத்தில் கொண்டு குடிநீர் இயந்திரங்களை முறையாகப் பராமரித்து, சுத்தப்படுத்தி பொதுமக்களுக்கும், அலுவலர்களுக்கும் சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் ஆவடி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சரியாக பராமரிப்பதாக தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அதிகாரிகளின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?