டெல்லி எல்லைகளுக்கு சீல் வைப்பு.. இரவோடு இரவாக கான்கிரீட் தடுப்புச் சுவர்கள் அமைப்பு...

இரவோடு இரவாக கான்கிரீட் தடுப்புச் சுவர்களை அமைத்த காவல்துறை, சாலைகளில் இரும்பு ஆணி வேலிகளை ஏற்படுத்தியுள்ளது.

Feb 14, 2024 - 09:26
Feb 14, 2024 - 09:31
டெல்லி எல்லைகளுக்கு சீல் வைப்பு.. இரவோடு இரவாக கான்கிரீட் தடுப்புச் சுவர்கள் அமைப்பு...

இரவோடு இரவாக டெல்லியை சுற்றி முள்வேலிகளால் தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர்.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்து நாடாளுமன்றத்தில் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கங்கள் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை நேற்று தொடங்கினர். 

இந்தப் போராட்டத்திற்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்பட நாடு முழுவதும் 200 விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நேற்று (பிப்.13) தொடங்கிய இந்த போராட்டத்தில் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கிப் படையெடுத்தனர்.

விவசாயிகளை தடுக்கும் வகையில், டெல்லியின் எல்லை மாவட்டங்களான அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத் மற்றும் ஹிசாரில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டது. எல்லைகளில் உள்ள முக்கிய சாலைகளில் தடுப்பு வேலிகளும்,கான்கிரீட் தடுப்புகளும், இரும்பு ஆணிகளால் செய்யப்பட்ட வேகத் தடைகளும் ஆங்காங்கே உருவாக்கப்பட்டது. 

தடையை மீறி நுழைந்த விவசாயிகளை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் கலைத்தனர். டிராக்டர்களை நெடுஞ்சாலை வழியாக அனுமதிக்காததால், வேறு பாதைகளில் டெல்லி நோக்கிச் செல்ல முயன்ற விவசாயிகள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அதுமட்டுமல்லாமல் ரப்பர் குண்டுகளால் காவல்துறையினர் சுட்டதில் சிலர் காயமடைந்தனர். டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் மீது இரவிலும் கண்ணீர் புகைகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் விவசாயிகள் டெல்லி நோக்கிய படையெடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், டெல்லியில் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க சிங்கு, திக்ரி மற்றும் காஜிபூர் எல்லைகளில், 2-வது நாளாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரவோடு இரவாக கான்கிரீட் தடுப்புச் சுவர்களை அமைத்த காவல்துறை, சாலைகளில் இரும்பு ஆணி வேலிகளை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow