போலீஸ் போல் நடித்து ரூ.10 லட்சம் வழிப்பறி செய்த கும்பல் - மருந்து விற்பனையாளர் புகார்
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னையில் போலீஸ் போல் நடித்து மருந்து விற்பனையாளரிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி செய்து தப்பியோடிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(24). இவர் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் மருந்து விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த ஜனவரி மாதம் மணிகண்டனின் கல்லூரி நண்பரான பிரவீன்குமார் என்பவர் வீடு வாங்குவதற்காக ரூ.10 லட்சம் கடனாக கேட்டுள்ளார். உடனே மணிகண்டன் ரூ.10 லட்சத்தை பிரவீன் குமாருக்கு கடனாக கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பிரவீன்குமார் பணம் ரெடி ஆகிவிட்டது என்றும் அதனை வந்து வாங்கி செல்லுமாறு என்றும் மணிகண்டனிடம் தெரிவித்துள்ளார். மணிகண்டன் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்ததால் தனது மைத்துனரான மற்றொரு மணிகண்டனை அனுப்பி, பணத்தை வாங்கி வருமாறு கூறியிருக்கிறார். உடனே மணிகண்டன் தனது நண்பரான கல்லூரி மாணவன் கோபி கிருஷ்ணன்(22) என்பவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு பணத்தை வாங்க சென்றார்.
பட்டாளம் சென்று பிரவீன் குமாரிடம் 10 லட்சம் ரூபாயை வாங்கிக்கொண்டு பின்னர் மணிகண்டன் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வியாசர்பாடி எருக்கஞ்சேரி மேம்பாலம் அருகே வந்தபோது, பின்னால் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று மணிகண்டனை வழிமறித்து தாங்கள் போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டது.
பின்னர் அந்த கும்பல் இருவரது செல்போனையும் வாங்கிக்கொண்டு வண்டியை சோதனை செய்ய வேண்டும் என கூறி திறந்து பார்த்துள்ளனர்.அப்போது பைக்கில் இருந்த ரூ.10 லட்சத்தை எடுத்துக் கொண்டதுடன் இதற்கான ஆவணங்களை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு மணிகண்டன் தனது நண்பரிடம் இருந்து பணத்தை பெற்று வருவதாக கூறியதை அடுத்து, அந்த கும்பல் காவல் நிலையம் வந்து எழுதிக்கொடுத்து விட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியதுடன் அவர்களது இருசக்கர வாகனத்தைக் பூட்டி சாவி எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றது.
இதனால் பதறிப்போன மணிகண்டன் உடனே இதுகுறித்து தனது மாமாவுக்கு தகவல் தெரிவித்ததுடன் வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்திருக்கிறார். அப்படி யாரும் இங்கு இல்லை என காவலர்கள் என கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், புகார் ஒன்றை அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி போலி போலீஸ் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
What's Your Reaction?