30 ஆண்டுகளுக்குப் பின் வறட்சி.. வறண்டு போன குந்தா அணை.. கோவை, நீலகிரியில் தலைதூக்கும் குடிநீர் பிரச்சினை

கடந்த 30 ஆண்டுகளுக்கு பின்னர் கடும் வெயிலின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் குந்தா அணை வறண்டு போயுள்ளது. கோவை, நீலகிரி மாவட்டத்தில் மழை பொய்த்துப்போனதால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

May 3, 2024 - 07:19
30 ஆண்டுகளுக்குப் பின் வறட்சி.. வறண்டு போன குந்தா அணை.. கோவை, நீலகிரியில் தலைதூக்கும் குடிநீர் பிரச்சினை


தமிழகத்தை பொறுத்த அளவில் வழக்கமாக ஏப்ரல் தொடக்கத்தில்தான் வெயில் தீவிரமடையும். ஆனால் இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சூடேறிய வெயில் மார்ச் மாதத்தில் சில இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் பதிவாக தொடங்கியது. அதேபோல ஏப்ரல் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெயில் பதிவாகியது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால், நீர்பிடிப்பு அணைகளான அவலாஞ்சி, அப்பர்பவானி, எமரால்டு, கெத்தை மற்றும் பார்சன்ஸ் வேலி அணைகளில் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. 

இந்நிலையில் உதகை அருகே குந்தா நீர்மின் நிலைய அணையில் நீர்மட்டம் முழுமையாக இல்லாமல் 30 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டு காணப்படுகிறது. இதனால் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் குந்தா அணையில் நீர் இல்லாமல் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. 

நீலகிரி மாவட்டத்தின் ஊட்டியில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் வெயில் பதிவாகியிருந்தது. ஏப்ரல் 28ம் தேதியன்று 29 டிகிரி செல்சியஸ்(84.2 டிகிரி ஃபாரன்ஹீட்) அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்தது. அதேபோல கொங்கு மாவட்டங்களிலும் வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. 

நீலகிரி மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் கூடலூர், மசினகுடி, முதுமலை பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. வனத்தில் பசுந்தீவனங்கள் இல்லாததால் கால்நடைகள், வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் நீர் நிலைகளும் வறண்டு விட்டது. இதனால் போதிய சத்துக்கள் கிடைக்காமல் மசினகுடி பகுதியில் உள்ள விவசாயிகள் பால் உற்பத்தியாளர்களின் பசுமாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக உயிரிழந்து வருகின்றன.

வறட்சி ஒரு பக்கம் இருக்க நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தலை தூக்கியுள்ளது. உதகையை அடுத்த லவ்டேல் பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் 36 ஆவது வார்டு லவ்டேல் பகுதியில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து பலமுறை வார்டு உறுப்பினரிடமும் முறையிட்டும் எந்த ஒரு பயணம் இல்லை எனவும் குடிதண்ணீருக்காக இரண்டு பகுதி மக்கள் இடையே மோதல் ஏற்பட கூடும் எனவும் விரைந்து இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு முறையான குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள்  காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆளும் கட்சிப் பகுதிக்கு மட்டும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தண்ணீர் செல்கிறது எங்கள் பகுதிக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைப்பதில்லை பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். விரைந்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

நீலகிரி மட்டுமல்லாது கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு எழுந்திருக்கிறது. எனவே மக்கள் போராட்டங்களை தொடங்கியுள்ளனர். பல தனியார் கல்லூரிகளில் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாமா என யோசித்து வருகின்றனர். 

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கோவை மக்கள் கூறுகையில், "எங்களுக்கு இங்கே கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. முதியோர்கள், நோயாளிகள், குழந்தைகளை வைத்துக்கொண்டு நாங்கள் ரொம்ப கஷ்டப்படுகிறோம். குடிநீர் குழாய்களில் நீர் விநியோகிக்கப்படுவதில்லை என்பதால், லாரிகளில் சிலர் தண்ணீரை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஒரு குடம் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது. தினமும் காசு கொடுத்து எங்களால் தண்ணீரை வாங்க முடியாது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சியின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக சிறுவாணி மற்றும் பில்லூர் அணை இருக்கிறது. இந்த அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணையின் நீர் மட்டம் சரிந்து வருகிறது. எனவே, குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

பில்லூர் அணையிலிருந்து நீர் எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சிறுவாணி அணைகளிலிருந்து ஓரளவுதான் நீர் எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய மேல் பவானியிலிருந்து கேரளா வழியாக தண்ணீர் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow