I am a Dark-skinned Bharatiya! - காங்கிரஸ் சாம் பிட்ரோடாவுக்கு அண்ணாமலையின் மாஸ் பதில்..

தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா கூறிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் தங்களது கண்டனங்களை வரிசையாக தெரிவித்து வருகின்றனர்.

May 8, 2024 - 17:44
I am a Dark-skinned Bharatiya! - காங்கிரஸ் சாம் பிட்ரோடாவுக்கு அண்ணாமலையின் மாஸ் பதில்..

ஊடகப் பேட்டியில் முன்னதாக பேசிய சாம் பிட்ரோடா, இந்தியாவைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டை நம்மால் ஒன்றிணைக்க முடியும் எனக்கூறினார். வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்காவைப் போலவும், கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும் இருந்தாலும், நாம் அனைவரும் சகோதரர்கள் என அவர் தெரிவித்தார். 

பல்வேறு மொழி, மதம், சமையல் மரபுகள், பழக்க வழக்கங்கள் உள்ள போதும் இந்திய மக்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் தெலங்கானாவில் வாராங்கலில் மக்களவைத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது தன்னை யாராவது தவறாகப் பேசினால் பொறுத்துக்கொள்ள முடியும், ஆனால் நாட்டு மக்களை தவறாகப் பேசுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறினார். 

தோல் நிறத்தைக் கொண்டு துஷ்பிரயோகம் செய்வது ஏற்றுக்கொள்ளவே முடியாதது எனவும் அவர் கண்டனம் தெரிவித்தார். மிகுந்த மரியாதை கொண்ட பழங்குடியினர் பிரிவை சேர்ந்த குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை, காங்கிரஸ் தற்போதும் தோற்கடிக்கவே நினைப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 

பிட்ரோடா கருத்து தொடர்பாக தனது X தளத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தியா ஆக்கிரமிப்பாளர்களின் நாடு என்றும் இந்த நாட்டுக்கென தனித்துவம் இல்லை என்றும் காங்கிரஸ் கட்சி நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். இதுவே அக்கட்சியின் தலைவர்களின் சிந்தனையை பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அமர்ந்திருக்கும் ஒருவரை தலைவராகக் கொண்டு செயல்படும் கட்சியிடம் இருந்து வேறெதையும் எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு I am a Dark-skinned Bharatiya! எனக்கூறி பிட்ரோடாவுக்கு பதிலளிப்பதாக தெரிவித்து தனது புகைப்படத்தை X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து நடிகை கங்கனா ரணாவத் உள்ளிட்ட பாஜகவைச் சேர்ந்த பலர் வரிசையாக பிட்ரோடா குறித்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதாகக் கூறி ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் ஒப்புமைகளை பிட்ரோடா கூறியது துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow