அமித்ஷாவுடன் தமிழிசை செளந்தரராஜன் திடீர் சந்திப்பு... பேசியது என்ன?... பரபரப்பு தகவல்!
அண்ணாமலையை மறைமுகமாக சாடிய தமிழிசை''முன்பெல்லாம் தமிழ்நாடு பாஜகவில் சேருவதற்கு பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படும், ஆனால் இப்போது குற்றச்செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் கூட பாஜகவில் சேர்க்கப்படுகின்றனர்'' என்றார்.
சென்னை: பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.
மக்களவை தேர்தலில் பாமக, தமாகாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. கோவையில் போட்டியிட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தென் சென்னையில் போட்டியிட்ட தமிழிசை செளந்தரராஜன் என தேர்தலில் போட்டியிட்ட பாஜகவினர் முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் தோல்வியை தழுவினார்கள்.
அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால், இந்த தேர்தலில் 25 முதல் 30 இடங்களில் வெற்றி பெற்று இருக்கலாம் என்று அரசியல் நிபுணர்கள், அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி.வேலுமணி கூறி இருந்தனர்.
அதே வேளையில் இதை மறுத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, '' ''மக்களவை தேர்தலில் அதிமுகவின் தயவின்றி போட்டியிட்டதால்தான் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. வரும் காலங்களிலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம்'' என்று கூறினார்
இதற்கிடையே ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த தமிழிசை செளந்தரராஜன், ''மக்களவை தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால் 20 முதல் 30 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கலாம். அதிமுக கூட்டணியுடன் பாஜக இருந்திருக்க வேண்டும்'' என்று கூறினார்.
மேலும் அண்ணாமலையை மறைமுகமாக சாடிய அவர், ''முன்பெல்லாம் தமிழ்நாடு பாஜகவில் சேருவதற்கு பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படும், ஆனால் இப்போது குற்றச்செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் கூட பாஜகவில் சேர்க்கப்படுகின்றனர்'' என்றார்.
இது அண்ணாமலை ஆதரவாளர்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியது. சமூகவலைத்தளங்களில் தமிழிசை செளந்தரராஜனை விமர்சித்த அவர்கள், ''தமிழிசை தலைவராக இருந்தபோது, தமிழ்நாடு பாஜகவில் எந்த வளர்ச்சியும் இல்லை. ஆனால் அண்ணாமலை தலைவரான பிறகுதான் தமிழ்நாட்டில் பாஜக அதிக வாக்கு வங்கியை பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பாஜகவை கொண்டு சேர்த்தவர் அண்ணாமலை'' என்றனர்.
இதற்கு பதிலடி கொடுத்த தமிழிசை ஆதரவாளர்கள், ''தமிழிசை தலைவராக இருந்தபோது கட்சிக்குள் ஒற்றுமை இருந்தது. கூட்டணி கட்சியையும் அரவணைத்து சென்றோம். ஆனால் இப்போது அண்ணாமலை எடுத்த தன்னிச்சையான முடிவுகளால்தான் தமிழ்நாடு பாஜகவுக்கு இந்த படுதோல்வி ஏற்பட்டுள்ளது'' என்றனர்.
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே, அவருக்கும், தமிழிசைக்கு இடையே மறைமுகமாக வெறுப்புணர்வு இருந்து வந்ததாகவும், அதன்பிறகு அது பூதாகரமாக வெடித்துள்ளதாவும் பாஜகவினர் சிலர் கூறினார்கள்.
தமிழ்நாடு பாஜகவில் முதன்முறையாக உட்கட்சிபூசல் உருவாகியுள்ளது டெல்லி பாஜக தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதற்கிடையே ஆந்திர முதல்வர் சந்திரபாபு பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்றனர்.
அப்போது விழா மேடையில் அமித்ஷா, தமிழிசையை பார்த்து கோபமாக திட்டுவதுபோல் வீடியோ வெளியாகி இருந்தது. அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக அமித்ஷா தமிழிசையை கண்டித்ததாகவும், அண்ணாமலை சொல்வதை கேட்கும்படி கூறியதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் பின்னர் இதை மறுத்த தமிழிசை, ''அமித்ஷா என்னிடம் மிகுந்த அக்கறையுடன் அரசியல் மற்றும் தொகுதி பணிகளை தீவிரமாக செயும்படி அறிவுரை வழங்கினார். தேவையற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' என்று கூறி இருந்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும், தமிழிசையை சந்தித்து பேசியதால் உட்கட்சி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழிசை செளந்தரராஜன் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து பேசியுள்ளார்.
அமித்ஷாவை சந்தித்து பேசிய காரணங்களை தமிழிசை இதுவரை வெளியிடவில்லை. மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் தோல்விக்கான காரணங்கள் குறித்தும், அடுத்து தமிழ்நாடு பாஜக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அமித்ஷா தமிழிசையிடம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அண்ணாமலையுடனான மோதல் குறித்தும், தமிழ்நாடு பாஜக உட்கட்சி பூசல் குறித்தும் அமித்ஷா தமிழிசையிடம் கேட்டதாகவும், மூத்த தலைவர்கள் ஒற்றுமையாக பணியாற்றும்படி தமிழிசைக்கு அறிவுரை வழங்கியதாகவும் கமலாய வட்டாரங்கள் கூறுகின்றன.
What's Your Reaction?