செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?...தடை போடும் அமலாக்கத்துறை.. சுப்ரீம் கோர்ட் சொல்லப்போவதென்ன?
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் நாளைய தினத்திற்கு தள்ளி வைத்துள்ளது. 11 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு எப்போது ஜாமின் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதய அறுவை சிகிச்சை செய்த அவர் ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் செந்தில் பாலாஜி தனது உடல்நலனை காரணம் காட்டி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை ஜாமின் கோரினார். அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. உச்சநீதிமன்ற கதவுகளை தட்டிய பிறகும் ஜாமின் கொடுப்பதில் அமலாக்கத்துறை முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
செந்தில்பாலாஜி ஜாமின் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில், நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா,உஜ்ஜல் புயன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை கோடை விடுமுறைக்கு பின் ஒத்திவைக்க வேண்டுமென்று அமலக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பு, ஏற்கனவே 330 நாட்களுக்கும் மேலாக மனுதாரர் சிறையில் உள்ளார். எனவே வழக்கை தள்ளி வைக்கக்கூடாது என்று கேட்டு கொள்ளப்பட்டது. மேலும் வழக்கை, இன்று பிற்பகலோ அல்லது நாளையோ விசாரணை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் செந்தில் பாலாஜி தரப்பில் வைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே இங்கு எழுப்பப்பட்டுள்ள அனைத்து சாரம்சமும் உயர்நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டு நிராகரிக்கபட்டவை என்பதால் தற்போது இந்த மனுவை விசாரிக்க அவசியம் இல்லை என்று அமலாகத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி தரப்பு, தற்போது வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரினால், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்றும், மேலும் சம்மந்தப்பட்ட நபர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது 330 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளார், எனவே அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதிகள், 330 நாள் சிறையில் உள்ளார் என்பதை காரணமாக ஏற்க முடியாது என்றும், அதனை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றும் தெரிவித்த நீதிபதிகள் பல கைதிகள் 2 , 3 ஆண்டுகள் சிறையில் உள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
மருத்துவ காரணம் காட்டி ஜாமின் கோரியதை, ஏற்கனவே உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது என்றும், இந்த வழக்கின் தன்மை மற்றும் தீவிரத்தை கருதி செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. எனவே தற்போதும் அதனை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்றும் அமலாகத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை நாளை தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இதன் மூலம் செந்தில் பாலாஜிக்கும் ஜாமின் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்துக்களை பார்த்தால் அவருக்கு நாளைய தினம் ஜாமின் கிடைக்குமா? என்ன செய்யப்போகிறார் செந்தில் பாலாஜி?
What's Your Reaction?