ரூ 4 லட்சம் கோடி ஊழல்: ஆளுநர் சந்தித்து திமுக மீது எடப்பாடி பழனிசாமி புகார் மனு

திமுக ஆட்சியில் ரூ 4 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் நடந்து இருப்பதாகவும், இது குறித்து விசாரிக்கக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார்.

ரூ 4 லட்சம் கோடி ஊழல்: ஆளுநர் சந்தித்து திமுக மீது எடப்பாடி பழனிசாமி புகார் மனு
Edappadi Palaniswami meets Governor, files complaint against DMK

சென்னை கிண்டி லோக் பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் மற்றும் நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

இந்த சந்திப்பு பின் மக்கள் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: ”2021 முதல் தற்போது வரை திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்த பட்டியலை வழங்கியுள்ளோம். இந்த ஊழல்களுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

கடந்த 56 மாதங்களில் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. ஏற்கெனவே இருந்த கடனைவிட கூடுதலாக ரூ. 4 லட்சம் கோடி கடனை அதிகரித்துள்ளது. ஊழல் செய்வதை தவிர் தமிழக மக்களுக்கு எந்த நலனும் செய்யவில்லை.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ. 64,000 கோடி, ஊரக வளர்ச்சித் துறையில் ரூ. 60,000 கோடி, சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையில் ரூ. 60,000 கோடி, எரிசக்தித் துறையில் ரூ. 55,000 கோடி, டாஸ்மாக் துறையில் ரூ. 50,000 கோடி, பத்திரப் பதிவுத் துறை ரூ. 20,000 கோடி, நெடுஞ்சாலைத் துறையில் ரூ. 20,000 கோடி, நீர் ஆதாரத் துறையில் ரூ. 17,000 கோடி, சென்னை மாநகராட்சியில் ரூ. 10,000 கோடி, தொழில்துறையில் ரூ. 8,000 கோடி, பள்ளிக் கல்வித் துறையில் ரூ. 5,000 கோடி, மக்கள் நல்வாழ்வுத் துறையில் ரூ. 5,000 கோடி,

வேளாண்மைத் துறையில் ரூ. 5,000 கோடி, சமூக நலன் துறையில் ரூ. 4,000 கோடி, உயர்க்கல்வித் துறையில் ரூ. 1,500 கோடி, இந்து சமய அறநிலையத் துறையில் ரூ. 1,000 கோடி, ஆதிதிராவிடர் நலத் துறையில் ரூ. 1,000 கோடி, சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறையில் ரூ. 750 கோடி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் ரூ. 500 கோடி, சிறைத் துறையில் ரூ. 250 கோடி, பால்வளத் துறையில் ரூ. 250 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.

இந்த ஊழல் தொடர்பான ஆதாரங்களை ஆளுநரிடம் கொடுத்துள்ளோம். உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow