பெண்களுக்கு பாலியல் தொல்லை... கசிந்த ஆபாச வீடியோக்கள்... முன்னாள் பிரதமர் பேரனுக்கு சிக்கல்..
தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்திருக்கும் பிரஜ்வல், தனது புகழைக் கெடுக்கும் வகையிலும், விஷமத்தை பரப்பும் வகையிலும் இந்த வீடியோக்கள் பரபரப்படுவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியிருக்கிறார். தேவகவுடாவின் பேரன், பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது போன்ற வீடியோ வேகமாக பரவிய நிலையில், கர்நாடக அரசியல் வட்டாரத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடகாவில் மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்திருக்கும் நிலையில், மே 7-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு இருக்கும் நிலையில், அண்மையில் வெளியான வீடியோ ஒன்று அம்மாநில அரசியலை புரட்டி போட்டு இருக்கிறது. முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மூத்த மகனான ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது போன்ற வீடியோ இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் பிரஜ்வல், தற்போது ஹசன் தொகுதியில் சிட்டிங் எம்.பியாக இருக்கிறார். மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்ட அவர், தற்போது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், தற்போது வெளியாகி இந்த வீடியோவால் அவருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
மாநில மகளிர் ஆணைய கடிதம் மூலம் அனுப்பிய புகாரின் அடிப்படையில், அவர் மீதான பாலியல் புகாரை விசாரிக்க சிறப்பு குழுவை அமைத்து முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அவர் மீது ஹோலநரசிப்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்திருக்கும் பிரஜ்வல், தனது புகழைக் கெடுக்கும் வகையிலும், விஷமத்தை பரப்பும் வகையிலும் இந்த வீடியோக்கள் பரபரப்படுவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதே போல், இந்த போலியான வீடியோவை காங்கிரசார் பரப்பி வருவதாக மதசார்பற்ற ஜனதாதள கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், பிரஜ்வல் தொடர்பான வழக்கில் சிறப்பு குழு விசாரிக்க உள்ள நிலையில், இதை பற்றி கருத்து கூற முடியாது என பாஜக தலைமை கூறியிருக்கிறது.
கர்நாடக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த வீடியோ, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அங்குள்ள அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?