தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்... 3 தலைமுறைகளின் சோக வரலாறு... துயர் துடைக்குமா அரசு?
சிவகங்கை அருகே மூன்று தலைமுறைகளாக ஒரு கிராமம், தண்ணீருக்காக இன்றும் அலைந்து கொண்டு இருக்கிறது.
தண்ணீர் பஞ்சத்தால் சில மக்கள் இடம்பெயர்ந்த நிலையிலும், மண்ணை விட்டுச் செல்ல மனமில்லாமல், முதியவர்கள் மட்டுமே வசித்து வரும் சோக வரலாறை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்...
சிவங்கை அருகே 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது நாட்டாகுடி கிராமம். பாழடைந்த ஓட்டு வீடுகள், கரடுமுரடான சாலைகள், பாலைவனமாகக் காட்சியளிக்கும் விளைநிலங்கள் இவைகள் தான், நாட்டாகுடி கிராமத்தின் தற்போதைய அடையாளம். பொட்டல்காடாக காட்சியளிக்கும் இந்த கிராமத்தில் எங்கு பார்த்தாலும் 50, 60 வயதை கடந்த முதியவர்களே காணப்படுகின்றனர். இதற்கு காரணம் அங்கு தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் தான்.
அரசு சார்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியும், சுத்திகரிப்பு நிலையமும் அமைத்துக் கொடுத்தும், அவைகள் முறையான பராமரிப்பு இன்றி சிதலமடைந்து காணப்படுகின்றன. பிரதமரின் ஜல் ஜீவன் திட்டத்தின் படி வீட்டிற்கு வீடு குழாய் மட்டும் தான் போடப்பட்டுள்ள நிலையில், பைப்பை திறந்தால் தண்ணீருக்கு பதில் காற்று மட்டுமே வருகிறது. இதனால் அருகில் உள்ள உப்பாற்றுற்கு தண்ணீர் தேடி சுமார் 3 கிலோ மீட்டர் நடைபயணமாக இங்குள்ள முதியவர்கள் செல்கின்றனர். காலை, மாலை என இரு வேலைகளிலும் ஆற்றில் ஊத்து நீரை எடுத்து பயன்படுத்துகின்றனர்.
இந்த தண்ணீர் பஞ்சம் அந்த கிராமத்தில் வசிக்கும் இளைஞர்களையும் தாகிக்க வைத்துள்ளது. ஆமாம், இந்த ஊர் பெயரை கூறினாலே அங்குள்ள இளைஞர்களுக்கு பக்கத்து கிராம மக்கள் பெண் தர மறுப்பதாக வேதனையாக கூறுகின்றனர் இங்குள்ள முதியவர்கள். இளைஞர்களின் நிலை இப்படி என்றால், வேலைவாய்ப்பு, வருமானம் மற்றும் பாதுகாப்பான சூழல் இவைகள் எதுவும் இன்றி தினம்தோறும் செத்துப் பிழைக்கும் நிலை தான் இங்கு வசிக்கும் முதியவர்களுக்கு. இப்படி, தங்களின் அவலநிலை குறித்து மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகார்களிடம் பலமுறை தெரிவித்தும் ஏமாற்றமே மிச்சம் என்கின்றனர் நாட்டாகுடி முதியவர்கள்.
இந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியமே நாட்டாகுடி கிராமத்திற்கு இந்த அவல நிலை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். நிலவிற்கு ராக்கெட் அனுப்பி பெருமைக் கொள்ளும் அரசு, குடிக்க தண்ணீர் இன்றி வாழும் நாட்டாகுடி மக்களின் கண்களில் வழியும் தண்ணீரை எப்போதுதான் துடைக்கும் என்று நா வறட்சியுடன் கேள்வி எழுப்புகின்றனர்.
What's Your Reaction?