விவசாயி மீது கூலிப்படை ஏவி கொடூர தாக்குதல்.. தி.மு.க கவுன்சிலரின் கணவர் உள்பட 5 பேர் கைது

ஒரு கார் மற்றும் 2 டூவிலர்களில் வந்த ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கியது.

Apr 28, 2024 - 21:35
விவசாயி மீது கூலிப்படை ஏவி கொடூர தாக்குதல்.. தி.மு.க கவுன்சிலரின் கணவர் உள்பட 5 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு அருகே முன் விரோதம் காரணமாக விவசாயி மீது கூலிப்படையை ஏவி கொலை வெறி தாக்குதல் நடத்திய தி.மு.க மாவட்ட பெண் கவுன்சிலரின் கணவரும், பொதுக்குழு உறுப்பினருமான திராவிட கதிரவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ். இவர், கடந்த 21-ம் தேதி வீட்டிற்கு டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு கார் மற்றும் 2 டூவிலர்களில் வந்த ஒரு கும்பல் கொத்தையகாடு என்ற இடத்தில் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது கோவிந்தராஜ் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர்கள் ஓடிவந்து அவரை மீட்டனர். ஆட்களை பார்த்ததும் அந்த கும்பல் தப்பியோடியது. இதனிடையே, கோவிந்தராஜ் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பான புகாரில் பாப்பாநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், திமுக மாவட்ட பெண் கவுன்சிலரின் கணவரும், பொதுக்குழு உறுப்பினருமான திராவிட கதிரவனை பிடித்து விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 4 நபர்களை ஏவி விவசாயியை தாக்கியதை ஒப்புக்கொண்டார். 

முன்னதாக, கோவிந்தராஜ் மகளை சொந்தத்தில் சகோதரர் முறை உள்ளவருக்கு கதிரவன் திருமணம் செய்து வைத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டு, ஒருமுறை பிரச்னையில் கோவிந்தராஜ் கதிரவனை காலனியால் அடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பலி தீர்க்கவே இவ்வாறு செய்ததாக அவர் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, கதிரவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow