நெல்லையில் பேருந்து ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

கோவில்குளம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்ற ஒயிட் மணி தான் மகேஷை வெட்டியது தெரியவந்துள்ளது.

Jan 19, 2024 - 12:25
Jan 19, 2024 - 18:29
நெல்லையில் பேருந்து ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

நெல்லையில் தனியார் பேருந்து ஓட்டுநரை பட்டப்பகலில் பேருந்துக்குள் வைத்தே அரிவாளால் வெட்டிய நபரின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம்,அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பசுக்கிடைவிளை என்ற பகுதியை சேர்ந்தவர் மகேஷ்.இவர் பாபநாசம் காரையார் பகுதியில் இருந்து அம்பாசமுத்திரத்தில் இருந்து சேரன்மகாதேவி வழியாக நெல்லை புதிய பேருந்து நிலையம் செல்லக்கூடிய தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் பாபநாசம் காரையாரில் இருந்து நெல்லை நோக்கி அந்த தனியார் பேருந்தை இயக்கி கொண்டிருந்தார்.பேருந்து அம்பாசமுத்திரம் பேருந்து நிலையம் வந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைந்து வைத்திருந்த அரிவாளை எடுத்து திடீரென ஓட்டுநர் மகேஷை சரமாரியாக வெட்டியுள்ளார்.இதில் மகேஷின் தலையில் வெட்டு விழுந்துள்ளது. அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அம்பாசமுத்திரம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், கோவில்குளம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்ற ஒயிட் மணி தான் மகேஷை வெட்டியது தெரியவந்துள்ளது.எனவே ஒயிட் மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

முதற்கட்ட விசாரணையில் முந்தைய நாள் அவர்களுக்கிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் சுப்பிரமணி என்ற ஒயிட் மணி பேருந்துக்குள் புகுந்து ஓட்டுநரை அரிவாளால் வெட்டுவது, அதனை ஓட்டுநர் தடுத்து அந்த நபரை உடனடியாக லாவகமாக பிடிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் பேருந்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் தற்போது அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

ஏற்கனவே இதே அம்பாசமுத்திரம் அருகே அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவரை பேருந்துக்குள் புகுந்து ஓட்டுநரின் முகத்தில் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். தொடர்ந்து அடுத்தடுத்து அம்பாசமுத்திரம் பகுதியில் பேருந்து ஓட்டுநர்களை பேருந்துக்குள் வைத்தே பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக அரிவாளால் வெட்டும் சம்பவம் அரங்கேறி வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow