வெற்றி தரும் வைகாசி விசாகம்... வேலவனை வழிபட்டால் நல்ல வேலை கிடைக்கும்

வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திரம் வடிவேலனுக்கு உகந்த நட்சத்திரமாக பக்தர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. விசாக தினத்தன்று வேலவனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும்.. நல்ல வேலை கிடைக்கும். இந்த ஆண்டு வைகாசி விசாகம் திருவிழா வரும் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

May 13, 2024 - 17:28
வெற்றி தரும் வைகாசி விசாகம்... வேலவனை வழிபட்டால் நல்ல வேலை கிடைக்கும்


தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அவதார தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வைகாசி விசாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும்.  வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வெற்றி கிடைக்கும்: முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும்! வேலவன் அருளால் விரும்பியது நடக்கும்! எனவே தான் திருசெந்தூர் முதல் தேசமெங்கும் முருகனது ஆலயங்களில் இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள். விசாகத் திருநாளில் வேலவனின் சன்னிதி சென்று வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும்.

ஆறுமுகன் அவதாரம்: சூரபத்மன் என்ற அசுரனிடம் இருந்து மக்களை காக்க சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர், முருகன். சரவண பொய்கையில் விழுந்த அந்த பொறிகள் ஆறு குழந்தைகளாயின. அந்தக் குழந்தைகளை ஆறு கிருத்திகை பெண்கள் எடுத்து வளர்த்தனர். அந்த ஆறு குழந்தை களையும் பராசக்தி எடுத்து அணைக்க அந்த அவை ஆறுமுகமும், பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே ஒரு குழந்தையாக மாறின.

ஆறுபடை வீடு: கலியுகத்தின் கண்ட தெய்வமாக விளங்குபவர் கந்தப்பெருமான். அவரது வேலை வணங்குவதே வேலையாக கொள்ள வேண்டிய நாள் விசாகத் திருநாளாகும்.   வைகாசி விசாகத்திருநாளில் பன்னிருகை வேலவனை எண்ணி விரதமிருந்து வழிபட்டால் இடையூறு சக்திகள் விலகும். லட்சியங்கள் நிறைவேறும். இந்த விசாகத் திருநாளில் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டுவிட்டு, அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வரலாம். கந்தப் பெருமானை உள்ளத்திலும், இல்லத்திலும் நினைத்து வழிபட்டு வரலாம்.

செல்வம் பெருகும்: வடிவேல் முருகனின் ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை வழிபடுபவர்கள், அபிஷேக ஆராதனைகளிலும் கலந்து கொண்டால் அற்புதப் பலன்கள் கிடைக்கும். வீட்டு பூஜையறையில் முருகப்பெருமான் படத்தை வைத்து வழிபடலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ஓம் சரவணபவ, நம ஓம் முருகா என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். வைகாசி விரதம் இருப்பவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் வேண்டிய வரம் கிடைக்கும்.

அன்றைய தினம் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும்.  இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் செல்வாக்கும் கிடைக்கப்பெறும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow