காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவைத்தேர்தலுக்கான வேட்புமனுவை ராஜஸ்தானில் இன்று தாக்கல் செய்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், NDA கூட்டணியும், இந்தியா கூட்டணியும் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத்தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 மாநிலங்களைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 56 பேர், வரும் ஏப்ரலில் ஓய்வு பெறுகின்றனர்.தொடர்ந்து 27ம் தேதி காலியிடங்களுக்கான தேர்தல் நடைபெறும் நிலையில், நாளையுடன் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசமும் நிறைவடைகிறது.
2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலே தனது கடைசி தேர்தல் என அறிவித்த சோனியா காந்தி, 1999-ம் ஆண்டு முதல்முறையாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் 5 முறை மக்களவை எம்.பியாக பதவி வகித்துள்ளார். தற்போது ரேபேலி தொகுதியில் அவர் எம்.பியாக பதவி வகித்து வரும் நிலையில், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக போட்டியிடவுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் முதன்முறையாக மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்பார். தொடர்ந்து சோனியாகாந்தியை அடுத்து, ரேபேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1964 முதல் 1967-ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இந்திரா காந்தி இருந்த நிலையில், காந்தி குடும்பத்தைச் சேர்ந்த 2-வது நபராக சோனியாகாந்தி மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மகனும் காங்கிரஸ் எம்.பியுமான ராகுல்காந்தியுடன் டெல்லியில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்பூருக்கு புறப்பட்டுச் சென்று சோனியா காந்தி வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா, கர்நாடகா போன்ற தென்மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற எளிய வாய்ப்புகள் உள்ளபோதும், வட மாநிலங்களின் மீது கொண்ட நெருக்கத்தால் ராஜஸ்தானை சோனியாகாந்தி தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.