குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் ஸ்ரீராமநவமி விரதம்.. மறக்காமல் தானம் கொடுங்கள்.. தலைமுறையும் செழிக்கும்
சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார் என ராமாயண இதிகாசத்தில் சொல்லப்பட்டுள்ளது. நாளைய தினம் புதன்கிழமை 17-04-2024 அன்று ஸ்ரீ ராம நவமி கொண்டாடப்படுகிறது. ராம நவமி நாளில் எப்படி விரதம் கடைபிடிக்கலாம் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
பகவான் மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஸ்ரீராமராக மனித அவதாரம் எடுத்தார். அயோத்தி அரசர் தசரதர்-கோசலை தம்பதியருக்கு மகனாக சித்திரை மாதம் நவமி திதியில் அவதரித்தார் ராமபிரான். அன்றைய தினம் ராம நவமி திருநாளாக நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
சிவபெருமானிடம் பல வரங்களை பெற்ற ராவணன், தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிப்பதற்காக, தசரத மன்னனுக்கு மகனாகப் பிறந்தார் மகாவிஷ்ணு. அயோத்தி மன்னனாகிய தசரதனுக்குப் பிள்ளைகள் இல்லை. அதனால், ரிஷ்யசிருங்க முனிவர் தலைமையில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அந்த யாகத்தின் பயனாக, தசரதச் சக்கரவர்த்தி நான்கு மைந்தர்களைப் பெற்றெடுத்தார். அவர்களுள் முதல் மைந்தனாக அவதரித்தார் ஸ்ரீ ராமன். அடுத்ததாக பரதன், சத்துருக்கன், லட்சுமணன் ஆகியோர் அவதரித்தனர்.
ராமபிரான் அவதரித்த நாளே ராமநவமி என்று கொண்டாடப்படுகிறது. ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர், பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு 'கர்ப்போஸ்தவம்' என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை. இதற்கு 'ஜன்மோதீஸவம்' என்று பெயர்.
இந்த ஆண்டு ஸ்ரீராம நவமி திருவிழா நாளைய தினம் (17-04-2024) புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. வீட்டில் பட்டாபிஷேக ராமர் படம் வைத்து வழிபடலாம். பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டு வைத்து, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். சாதம், பாயாசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.
ராஜரிஷி விசுவாமித்திரருடன் இருந்தபோதும், அதன்பின், பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தின்போதும், ராமபிரான் நீர்மோரையும், பானகத்தையும் தாகத்திற்காக அருந்தினார். அதன் நினைவாகவே, நீர்மோரும், பானகமும் ஸ்ரீ ராமனின் அவதார தினமான ஸ்ரீ ராம நவமி அன்று நைவேத்திய பொருட்களாகப் படைக்கப்படுகின்றன.
ஸ்ரீராமநவமி நாளில் ராமரை பற்றிய நூல்களை படிக்கலாம். ராம நாமம் சொன்னால் போதும் ஸ்ரீராமனின் அருளும், அனுமனின் அருளும் கிடைக்கும். ராம நாமமானது அஷ்டாட்சரமான 'ஓம் நமோ நாராயணாய' என்பதில் உள்ள 'ரா' என்ற எழுத்தையும், பஞ்சாட்சரமான 'நமச்சிவாய' என்ற எழுத்தில் 'ம' என்ற எழுத்தையும் சேர்த்து 'ராம' என்றானது.
ராம நவமியன்று, ராம நாமம் உச்சரிக்கப்படும் இடங்களிலும், இராமாயணம் படிக்கப்படும் இடங்களிலும் அங்குள்ள அடியவர்கள் மீது ஸ்ரீ ஆஞ்சநேயர் எழுந்தருள் செய்து ஆனந்திப்பாராம். எனவே, ராம நவமி நாளில் ஸ்ரீராமனை மந்திரங்கள் கூறி வணங்குவதன் மூலம் அனுமனின் அருளையும் பெறலாம்.
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே
என்று மந்திரம் கூறி ஸ்ரீராமரை வணங்கலாம். ஸ்ரீராம நவமி நாளில் ஸ்ரீராம நாமம் கூறி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களின் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவர், குடும்ப நலம் பெருகி, வறுமை நீங்கி செல்வம் பெருகும்.நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ராம நவமி நாள் குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும் நாள் மறந்தும் கூட இந்த நாளில் சண்டை போடாதீர்கள்.
ராம நவமி நாளில் ஸ்ரீராமருக்கு படையலிட்ட நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். தானம் கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தானம் தர வேண்டும். ஸ்ரீ ராமன் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டதால், அவருடைய பிறந்த நாளில் எளிய பானங்களான நீர்மோர், பானகம் வழங்குவதையும், விசிறி, செருப்பு, குடை போன்றவைகளையும் தானமாக கொடுக்கலாம். ஸ்ரீராம நவமி நாளில் தானம் கொடுப்பதன் மூலம் பல தலைமுறைக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
What's Your Reaction?