தேர்தல் நேரத்தில் நக்சலைட்டுகள் தாக்குதல்.. பதில் தாக்குதலில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.. பாதுகாப்பு படையினர் அதிரடி

Apr 16, 2024 - 20:56
தேர்தல் நேரத்தில் நக்சலைட்டுகள் தாக்குதல்.. பதில் தாக்குதலில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.. பாதுகாப்பு படையினர் அதிரடி

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 11 மக்களவைத் தொகுதிகளில் ஏப்ரல் 19, 26 மற்றும் மே-07 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் துணை ராணுவப் படை, எல்லை பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கான்கேர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு எல்லை பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சோட்டோபேத்தியா அருகே நக்சலைட்டுகள், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாக்குதலில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தனர்.

நக்சலைட்டுகள் கொல்லப்பட்ட பகுதியில் இருந்து, 7 AK ரக துப்பாக்கிகள் மற்றும் 3 லைட் மெஷின் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சத்தீஸ்கர் துணை முதலமைச்சர் விஜய் வர்மா, "பாதுகாப்பு படை வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் காலங்களில் நக்சல்கள் இல்லாத நிலையை உருவாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்த அரசு தயாராக உள்ளது" என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow