குரு பெயர்ச்சி.. ரிஷபத்திற்கு இடம் மாறும் குரு.. ஆலங்குடி, தென் திட்டை பரிகாரத்தலங்களில் குவிந்த பக்தர்கள்
குரு பெயர்ச்சியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள குரு பரிகாரத்தலங்களில் நடைபெறும் லட்சார்ச்சனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

குரு பகவான் சுப கிரகம். ஓராண்டுக்கு ஒரு ராசியில் பயணம் செய்வார். மேஷ ராசியில் பயணம் செய்த குரு பகவான், இன்று ( மே 1) முதல் ரிஷப ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். இதனையொட்டி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள குரு பரிகாரத்தலங்களில் நடைபெறும் சிறப்பு லட்சார்ச்சனை விழாவில் பக்தர்கள் காலை முதலே பங்கேறறு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல்பெற்ற குரு பரிகார தலமாக விளங்கும் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தென்முகக் கடவுளாக விளங்கும் தக்ஷிணாமூர்த்தியே குரு பகவானாக தனி சன்னதியில் அமையப்பெற்று அருள்பாலித்து வருகிறார்.
நவக்கிரகங்களில் உள்ள குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்கக்கூடிய இந்த ஆலயத்தில்.. இன்று (01.05.2024) மாலை 5.19 மணி அளவில் குரு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. மேஷம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடைகிறார். இதனையொட்டி நேற்று முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
தட்சிணாமூர்த்திக்கு பால், சந்தனம், பன்னீர் மற்றும் திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து குரு பகவானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு, ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், கன்னி, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தங்களது ராசிக்கு பரிகாரங்கள் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தமிழகம் மற்றும் பல மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் 700 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
குரு பெயர்ச்சியை முன்னிட்டு குருபரிகார ஸ்தலமாக திகழும் அருள்மிகு. தஞ்சை மாவட்டம் திட்டை வஷிஸ்டேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்கள் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தென் திட்டை வஷிஸ்டேஸ்வரர் திருக்கோவில் குருபரிகார ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. இக்கோவிலில் குருபகவான் தனி சன்னதியில் தெற்கு திசை நோக்கி ராஜகுருவாக அருள்பாலித்து வருகிறார்.
இன்று குரு பெயர்ச்சியை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருவதால் கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க தனி தனி வழியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று குரு பெயர்ச்சியை முன்னிட்டு இன்று முதல் ரிஷபம். மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய பரிகார ராசிக்காரர்கள் சிறப்பு அர்ச்சனை செய்து செல்கின்றனர்.
What's Your Reaction?






