கணவரை இழந்தவர் செங்கோலை வாங்கக் கூடாதா?..ஆகம விதிகளில் எங்கு உள்ளது?.. மீனாட்சி அம்மன் கோயில் வழக்கில் நீதிபதி கேள்வி...

Apr 16, 2024 - 21:09
கணவரை இழந்தவர் செங்கோலை வாங்கக் கூடாதா?..ஆகம விதிகளில் எங்கு உள்ளது?.. மீனாட்சி அம்மன் கோயில் வழக்கில் நீதிபதி கேள்வி...

கணவரை இழந்தவரிடம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் செங்கோலை வழங்கக் கூடாது என உத்தரவிட கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த தினகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில்,"மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவின் ஒவ்வொரு நிகழ்விலும், ஆகம விதிகள் முறையாக பின்பற்றப்படும். விழாவின் 8-ம் நாளான பட்டாபிஷேக நிகழ்ச்சியில், மீனாட்சியம்மனின் கைகளில் செங்கோல்  ஒப்படைக்கப்படும். அந்த செங்கோலை அறங்காவலர் குழு தலைவர் பெற்றுக் கொள்வார்.  ஆகம விதியின் படி திருமணம் ஆகாதவரோ, கணவன் அல்லது மனைவியை இழந்தவரோ செங்கோலை பெற்றுக் கொள்ள இயலாது. தற்போது மீனாட்சி அம்மன் கோயிலின் அறங்காவலர் குழு தலைவராக இருப்பவர் ருக்மணி பழனிவேல் ராஜன். அவர் கணவரை இழந்தவர் என்பதால்  கோயிலின் விதிகளை பின்பற்றி அவரிடம் செங்கோலை வழங்க இயலாது. தகுதியான வேறு  நபரிடம் செங்கோலை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சரவணன் முன்பு இன்று (ஏப்ரல் 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில்  கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி,  "இதுபோன்ற மனுவை ஏற்கனவே உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்து தள்ளுபடி செய்துள்ளது. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. தள்ளுபடி செய்ய வேண்டும்" என வாதிட்டார்.

தொடர்ந்து, "திருமணம் ஆகாதவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது? என மனுதாரருக்கு நீதிபதி சரவணன் கேள்வி எழுப்பினார். மேலும், கோயிலுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோலை வாங்குபவரும் இந்து தானே?. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டுள்ள நிலையில், கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது ஏன்? என அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தார். 

மேலும், இந்தக் காலத்திலும் இதுபோன்ற கருத்துக்களை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல என குறிப்பிட்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow