திருமுல்லைவாசல் : கடல் அரிப்பைத் தடுத்து ஊரைக் காப்பாற்றும்படி மக்கள் கோரிக்கை 

விரையில் அந்த 130 மீட்டர் பகுதியில் கருங்கற்கள் கொட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடல் அரிப்பு தடுக்கப்படும்

Dec 28, 2023 - 15:35
Dec 28, 2023 - 18:19
திருமுல்லைவாசல் : கடல் அரிப்பைத் தடுத்து ஊரைக் காப்பாற்றும்படி  மக்கள் கோரிக்கை 
திருமுல்லைவாசல் : கடல் அரிப்பைத் தடுத்து ஊரைக் காப்பாற்றும்படி  மக்கள் கோரிக்கை 

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடல்பகுதியில் கடல் அரிப்பை தடுத்து ஊரை காப்பாற்றும்படி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் கடற்கரையோர கடல் அரிப்பை தடுப்பதற்கு மேட்டுத்தெருவில் இருந்து புதிய பாலம் வரை கரையோரம் 330 மீட்டர் தூரத்திற்கு ரூ.2.70 கோடி செலவில் கருங்கற்கள் கொட்டி கடல் அரிப்பை தடுப்பதற்கான பணிகள் நடந்தன.இதில் 200 மீட்டர் மட்டுமே கருங்கற்கள் கொட்டப்பட்ட நிலையில் புதிய பாலம் வரை மீதமுள்ள 130 மீட்டர் தூரம் கருங்கற்கள் கொட்டாமல் விடுபட்டுள்ளது. இது குறித்து கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மேட்டுத்தெரு, கிழக்கு தெரு மக்களிடம் பேசினோம்.

”கருங்கற்கள் கொட்டாமல் இருப்பதால் அலையின் சீற்றம் காரணமாக நாளுக்கு நாள் கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் அலைகளின் சீற்றத்தால் மேட்டுத்தெருவிற்குள் கடல் நீர் புகுந்து பாதிப்பையும் ஏற்படுத்திவிடுகிறது. மேட்டுத்தெருவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சாலைகளும் கடல் அரிப்பால் சிதிலமடைந்து முற்றிலும் நடந்து செல்வதற்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது.

இதனிடையே மேட்டுத்தெரு, கிழக்குத்தெரு பகுதிகளில் வசிக்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் எந்நேரமும் அலைகளின் சீற்றங்களுக்கிடையே அச்சத்துடனே வசித்துவரும் சூழலும் ஏற்பட்டுள்ளது. கருங்கற்கள் கொட்டாமல் விடுபட்டுள்ள கரையோர பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் கற்களை கொட்டி கடல் அரிப்பை தடுக்க வேண்டும். 

எங்கள் குடும்பங்கள் அச்சமில்லாமல் வாழ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கற்கள் கொட்டும்பணி பாதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பணிகள் தொடங்கியபோது ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக இருந்ததாகவும், அது தற்போது 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுவிட்டதால் வித்தியாச தொகையை யார் ஏற்பது? என்ற குழப்பத்தில் பணி செய்துவந்த ஒப்பந்தாரர் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.இதனால் நாளுக்கு நாள் மேட்டுத்தெரு, கிழக்குத்தெரு பகுதியில் கடல் அரிப்பு அதிகமாகி உயிருக்கு பயந்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்றவேண்டும்.” என்றனர் சோககுரலில்.

இது குறித்து மாவட்ட நிர்வாகமோ, “விரையில் அந்த 130 மீட்டர் பகுதியில் கருங்கற்கள் கொட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடல் அரிப்பு தடுக்கப்படும்.” என்கிறது.

-ஆர்.விவேக் ஆனந்தன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow