நெல்லை மாவட்ட வெள்ளச் சேதம் எவ்வளவு?-கலெக்டர் விளக்கம்
குடிசைகளை இழந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம், ஒரு ஆட்டுக்கு 4000, கன்றுக்கு 2000, கோழிக்கு 100 ரூபாய் வீதம் 2.87 கோடி ரூபாய் வழங்க நடவடிக்கை
கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் நெல்லையை புரட்டிப் போட்டு விட்டது மழை. 24 மணி நேரமும் இடைவிடாது பெய்த கன மழையால் தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதனால் கருப்பந்துறை, விளாகம், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் உள்ளிட்ட 11 கிராமங்களை வெள்ளம் சூறையாடி விட்டது.
வீட்டிலிருந்த டி.வி, சோபா, சிலிண்டர்கள், வாஷிங் மெஷின்கள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. சிறு, குறு வியாபார நிறுவனங்கள் நிலைகுலைந்து விட்டன. பெட்டிக்கடைகள் அனைத்தும் நாசமாகி விட்டன. தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வர்கள் மக்களுக்கு உணவு, உடை, போர்வைகள் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கலெக்டர் கார்த்திகேயன் நெல்லை மாவட்டத்தில் வெள்ளச் சேதம் எவ்வளவு என்று கணக்கெடுக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி, வருவாய், வேளாண்மைத்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வார காலமாய் கிராமம்,கிராமமாகப் போய் வெள்ளச் சேதம் பற்றி கணக்கெடுத்திருக்கிறார்கள்.
இது குறித்து கலெக்டர் கார்த்திகேயன் கூறுகையில், ”நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்திற்கு 16 பேர் பலியாகியிருக்கிறார்கள். 67 மாடுகள், 135 கன்று குட்டிகள், 504 ஆடுகள், 28392 கோழிகள் உயிரிழந்திருக்கின்றன. 1064 குடிசைகள் முற்றிலுமாய் இடிந்து சேதமடைந்திருக்கிறது. பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு விட்டது. குடிசைகளை இழந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம், ஒரு ஆட்டுக்கு 4000, கன்றுக்கு 2000, கோழிக்கு 100 ரூபாய் வீதம் 2.87 கோடி ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
What's Your Reaction?