கோவையில் பரவும் ஃப்ளூ காய்ச்சல்: முகக்கவசம் அணிய உத்தரவு
வாய் மற்றும் மூக்கை கைக்குட்டையால் அல்லது துணியால் மூடிக்கொள்ள வேண்டும்.இதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து வைரஸ் கிருமி வெளியே பரவாது
மக்களே வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுங்கள்! என்று மீண்டும் அந்த குரூர கொரோனா காலத்தை நினைவுபடுத்தியுள்ளார்கள் கோவையில். மாவட்ட நிர்வாகம் சொல்லியுள்ளது என்னவோ மக்களின் நன்மைக்குதான்.ஆனாலும் லாக் டவுன் காலங்கள் மனதில் நிழலாடி மண்டை காய வைக்கின்றன.
கோவை மாவட்டத்தில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் எனும் நோய் விரைவாக பரவி வருகிறது. வழக்கமாக கோவையில் வெளுத்து வாங்கும் தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு தவறிவிட்டது.கோடையில் தண்ணீர் பஞ்சம் கன்ஃபர்ம்! என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் வடகிழக்கு பருவமழையோ கோவையை வெச்சு செய்கிறது.யாருமே எதிர்பாராத அளவில் மழையின் அளவு பிரமிக்கவும், பயப்படவும் வைக்கிறது.
அதேவேளையில், மழைக்காலத்தில் வரும் பருவகால நோய்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது.அதில் முக்கியமானதாக இந்த ஃப்ளூ காய்ச்சல் மிரள வைக்கிறது.
இந்த நோயின் தாக்கங்களாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாவது,”குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த தொற்று மிக அதிகமாகவும், எளிதாகவும் ஏற்படக்கூடும்.
காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் போன்றவை இவ்வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு வாரத்தில் குணமடைந்துவிடுவர். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இருதய நோய், புற்றுநோய் உள்ளவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் இந்த காய்ச்சலுக்கு மருந்து உட்கொள்தல் அவசியம்.
இந்த சூழலில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, பின் ஆற வைத்து குடியுங்கள். தொண்டையில் கரகரப்பு உருவானால் சமையல் கல் உப்பை சுடுநீரில் போட்டு, தொண்டையில் படும் வகையில் வாய் கொப்பளிப்பது நல்லது. இருமும்போதும், தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டையால் அல்லது துணியால் மூடிக்கொள்ள வேண்டும்.இதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து வைரஸ் கிருமி வெளியே பரவாது” என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த சூழலில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், “மக்கள் தங்கள் உடல் நலனை இந்த மழை சீசனில் அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். வைரஸ் காய்ச்சல் பரவல் இருப்பதால் முகக்கவசம் அணிந்து வெளியே சென்று வர வேண்டும். வைட்டமின் சி மற்றும் புரதச்சத்து மிக்க உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று ஆலோசனை தந்துள்ளார்.ஆக, மீண்டும் முக கவசமா?! என்று கோவையன்ஸ் சோகமாகியுள்ளனர். எல்லாம் நம்ம நல்லதுக்கு தானுங்கோ!
-ஷக்தி
What's Your Reaction?