மரத்தில் மோதிய கார்.. 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி... ஓட்டுநர் உறங்கியதுதான் காரணமா?
கர்நாடகவிலிருந்து ஐதராபாத் நோக்கி சென்ற கார் நிலைதடுமாறி மரத்தில் மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து அப்துல் ரகுமான் என்பவர், தனது குடும்பத்தினர் 12 பேருடன் காரில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு சென்று கொண்டிருந்தனர். கார் வனபர்த்தி மாவட்டம் கொத்தகோட்டா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுக் கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்தில் 2 வயது, 5 வயது மற்றும் 7 மாத குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாலை 3 மணி அளவில் கார் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் தூங்கியதால் சாலையின் டிவைடர் மோதி கட்டுபாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்து நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. அதிவேகமாக மரத்தில் மோதியதில் காரின் முன்பகுதி முற்றிலும் நசுங்கியது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?