ரசவாதி திரைப்படம் நாவலின் தழுவலா?... இயக்குநர் சாந்தகுமார் விளக்கம்..
மெளனகுரு, மகாமுனி என இரண்டே படங்களை மட்டும் இயக்கியிருந்தாலும் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர் சாந்தகுமார். இவரது இரண்டு படங்களும் இன்றும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன.
கடந்த 2019-ம் ஆண்டில் ஆர்யா நடிப்பில் மகாமுனி திரைப்படம் வெளியான நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளார் இயக்குநர் சாந்தகுமார். அவரது இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடித்துள்ள ரசவாதி திரைப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படம் குறித்து பல்வேறு விசயங்களை இயக்குநர் சாந்தகுமார் நம்மிடையே பகிர்ந்துள்ளார். அவை உங்களுக்காக...
கேள்வி : ரசவாதி.. பெயரே புதுசா இருக்கு. என்ன மாதிரியான கதை இது?
பதில் : கொடைக்கானலில் வசிக்கும் இளம் சித்த மருத்துவரான அர்ஜூன்தாஸை சுற்றி கதை நடக்கிறது. ரசவாதம் என்பது ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாக மாற்றுவது. இந்த கதையில் அவர் எதை மாற்றுகிறார்?, காலம் என்ன செய்கிறது? என்பதை பல கதாபாத்திரங்களின் பின்னணியில் அழுத்தமாக சொல்லியிருக்கிறேன். உலோகத்தை இங்கே மனதாக காண்பிக்கிறேன்.
கேள்வி : படத்தில் வேறு யார் எல்லாம் நடிக்கிறாங்க?
பதில் : தன்யா ரவிச்சந்திரன் ஹீரோயின். இதுவரை நடிக்காத புது கதாபாத்திரத்தில் விஜய் டிவி ரம்யா வர்ராங்க. ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்பட பலர் ரசவாதி படத்தில் நடித்துள்ளனர்.
கேள்வி : ஒவ்வொரு படத்துக்கும் அதிக இடைவெளி ஏன்?
முதல் படத்துக்கும், இரண்டாவது படத்துக்கும் இடைவெளி இருந்தது. ஆனால், இந்த படத்தின் தாமதத்துக்கு நான் பொறுப்பல்ல, கொரோனா தான். நானே தயாரித்து இருப்பதால் தாமதம். மகாமுனி திரைப்படத்திற்காக கொடைக்கானலில் சுற்றி வந்தபோது இந்த கதை உருவானது.
கேள்வி : ரசவாதி திரைப்படம் நாவலின் தழுவலா? என்ன ஜானர்?
பதில் : நாவலுக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை. ரொமான்ஸ், ஆக்சன், கிரைம், திரில்லர் பின்னணியில் நடக்கும் கதை இது. கொடைக்கானல், பழனி, மதுரை, கடலூரில் படப்பிடிப்பு நடந்தது. நான் திரைக்கதை எழுதிவிட்டுதான் தலைப்பு பிடிப்பேன். இந்த படமும் அப்படியே. கதைக்கும், தலைப்புக்குமான அர்த்தம் படம் பார்த்தால் புரியும்.
கேள்வி : அர்ஜூன்தாஸ் சித்த மருத்துவர் என்பதால் மூலிகை, ஆராய்ச்சினு வருமா?
பதில் : இல்ல. இது நான்கைந்து கதாபாத்திரங்களை சுற்றி நடக்கும் கதை. இந்த படத்துல மனநிலை பாதிக்கப்பட்டவராகவோ, மனஅழுத்த கேரக்டராகவோ வரல. என் முந்தைய படங்களை விட இதில் கொஞ்சம் ரொமான்ஸ் அதிகம். சண்டை காட்சிகளும் உள்ளன. அர்ஜூன்தாஸ் குரலுக்காக அவர நடிக்க வைக்கல. ஒன்று அவர் உருவம், இரண்டாவது கேரக்டருக்கு அவர் செட்டானார். கதைதான் வெற்றியை முடிவு செய்யும்.
கேள்வி : தமன் இசையமைப்பாளரா? புதுசா இருக்குதே?
பதில் : கமர்ஷியல் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு தமன் இசையமைத்து வருகிறார். அவர் எனக்காக, கதைக்காக அதிகம் நேரம் செலவழிப்பார். எனக்கு இந்த கதைக்கு இப்படிப்பட்ட இசை தேவை என்று ஆராய்ச்சி செய்து செல்கிறேன். அதற்கு தமன் சரியாக இருந்தார். அவர் இசை புதிதாக இருக்கும்.
கேள்வி : தயாரிப்பாளராக இருப்பது கஷ்டமாக இருக்குதா?.
பதில் : தமிழ் சினிமாவில் ஒரு படத்தை விற்க தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் அல்லது நடிகர்கள் ஸ்ட்ராங்காக இருக்கணும். இல்லைன்னா கஷ்டம். பேப்பர் வொர்க்க பக்காவா முடித்துவிட்டு படப்பிடிப்பு செல்வதால் பட்ஜெட் அதிகமாகாது. இந்த படத்தை வெறும் 50 நாட்களில் எடுத்து முடித்தேன்.
கேள்வி : ரசவாதி ட்ரைலரில் ஹீரோ ஒரு மாதிரி நடக்கிறாரே? அவர் மாற்றுத் திறனாளியா?.
பதில் : இல்லை. அந்த சீனுக்கு ஒரு பின்னணி இருக்கிறது. அதுபற்றி இப்ப சொல்ல வேண்டாமே?. என் கற்பனையில்தான் என் படங்கள் உருவாகின்றன. சென்சார் ஆகிவிட்டது. U/A சான்றிதழ் கொடுத்தாங்க. சில வார்த்தைகளே ஃப்ளோவில் எழுதிவிடுகிறேன். அதுக்கு கட்.
கேள்வி : மே 10ம் தேதி ஸ்டார், இங்க நான்தான் கிங்கு போன்ற படங்கள் வருதே?
பதில் : மே 10-ம் தேதி படம் வெளியீடு என்பதை முன்பே முடிவு செய்துவிட்டோம். எனக்கான பார்வையாளர்கள் ரசவாதியை பார்க்க வருவார்கள் என நம்புகிறேன். நான் நல்லா எழுதுறேன் என்று சொல்றாங்க. இனி இடைவெளி இருக்காது. என் படங்களுக்கு அடுத்த பாகங்களும் இல்லை.
கேள்வி : மலையாள சினிமாவை கொண்டாடுவதை எப்படி பார்க்கிறீங்க?
பதில் : மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் வெற்றியால் தான் இப்படி பேசப்படுகிறது. மலையாளத்திலும் வெற்றி விகிதம் குறைவுதான். தவிர, தமிழிலும் நல்ல படைப்புகள் வருது. ஒரு படத்தின் வெற்றியால் எதையும் கணிக்க முடியாது.
கேள்வி : ஒரு பிரபல அரசியல்வாதியின் வாரிசு நடிக்கிறாராமே?
பதில் : ஆமா, முன்னாள் கேரள முதலமைச்சரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான இ.எம்.எஸ் பேரன் சுஜித் சங்கரும் நடிக்கிறார். ஆனால், அவர் தன்னை காண்பித்துக்கொள்வது இல்லை. அவர் நடிப்பை பார்த்து செட் மிரண்டது. டெல்லி நேஷனல் ட்ராமா ஸ்கூலில் படித்தவர்.
கேள்வி : இந்தியில் அகிரா என்ற பெயரில் பெரிய பட்ஜெட்டில் மெளனகுரு திரைப்படம் வெளியானது. அது ஏன் வெற்றி பெறவில்லை?
பதில் : மெளனகுரு படத்தில் இருந்த உயிரோட்டமான கருத்துகள் அகிரா திரைப்படத்தில் இல்லை. அதனால் வெற்றி பெறாமல் போயிருக்கலாம்.
கேள்வி : இன்றைக்கு ஒரு படம் ஹிட் கொடுத்தால் சில இயக்குநர்கள் ஆடுகிறார்கள். நீங்கள் 2 அழுத்தமான படைப்புகள கொடுத்தும் வெளியே அதிகம் தெரியாதது ஏன்?
பதில் : திருச்சியில ஒரு இடத்துல நின்றுகொண்டு இருந்தேன். ஒருத்தர் வந்து நீங்க விஜய்சேதுபதியானு கேட்டார். பப்ளிசிட்டி நடிகர்களுக்கு தேவை. நாங்கள் இருட்டில் இருந்து வெளிச்சத்தை பார்ப்பவர்கள். இது போதும்.
What's Your Reaction?