"பெங்களூரு ஹோட்டலில் வெடித்தது குண்டு தான்" - முதலமைச்சர் சித்தராமையா உறுதி... விசாரணை தொடங்கிய என்.ஐ.ஏ.,..
பெங்களூருவில் ஹோட்டல் ஒன்றில் மர்ம பொருள் வெடித்த விவகாரத்தில், குண்டு தான் வெடித்ததாக பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே, இந்திரா நகரில் ராமேஸ்வரம் கஃபே என்ற ஹோட்டல் இயங்கி வருகிறது. இன்று (01.03.2024) திடீரென அக்கடையில் இருந்து பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த ஹோட்டலில் இருந்தவர்கள் அலறி அடித்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதில் ஓட்டல் ஊழியர் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் இது குறித்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பீகார் முன்னாள் துணை முதலமைச்சரான தேஜஸ்வி யாதவ், "சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் காஃபே ஹோட்டல் உரிமையாளரிடம் பேசியதாகவும், வாடிக்கையாளர் ஒருவரால் வைக்கப்பட்ட பையில் இருந்து குண்டு தான் வெடித்ததாகவும் கூறியதாக தெரிவித்துள்ளார். கடையின் ஊழியர் ஒருவரும் இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்திருப்பதாக தெரிவித்துள்ள தேஜஸ்வி, இது குறித்து அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா பதில் கூற வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தனது விசாரணையை தொடங்கியுள்ளது என்.ஐ.ஏ., கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி நடந்தது என்ன என்பது குறித்து அறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ராமேஸ்வரம் கஃபேவில் வெடித்தது வெடிகுண்டு தான் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உறுதி செய்துள்ளார். வாடிக்கையாளர் போல வந்தவர் வைத்திருந்த பையில் இருந்த வெடிகுண்டு தான் வெடித்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
What's Your Reaction?