திடீர் திருப்பம், 3 நாள் தேடுதல் வேட்டை: பீகார் பெண் சடலம் மீட்பு
அடையாறு பகுதியில் சாக்கு மூட்டையில் இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், அவரது மனைவியும் குழந்தையும் கொலை செய்யப்பட்டது தெரியவந்த நிலையில், இன்று மூன்றாவது நாளாக நடைபெற்ற தீவிரத் தேடுதல் வேட்டையில் பெண்ணின் சடலம் பெருங்குடி குப்பைக் கிடங்கிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 26-ம் தேதி அடையாறு இந்திரா நகர் பகுதியில் ரத்தம் வழிந்த நிலையில் கிடந்த ஒரு சாக்கு மூட்டையை போலீஸார் சோதனையிட்டபோது, அதில் வெட்டுக் காயங்களுடன் 24 வயது இளைஞர் ஒருவரின் உடல் இருந்தது. விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ்குமார் என்பது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிக்கந்தர் மற்றும் நரேந்திர குமார் உள்ளிட்ட இருவரைப் பிடித்து விசாரித்தபோதுதான், சென்னை தரமணியில் நடந்த அந்தப் பயங்கரக் கூட்டுப் படுகொலை வெளிச்சத்திற்கு வந்தது.
வேலை தேடி சென்னை வந்த கவுரவ்குமார், தனது மனைவி புனிதாகுமாரி மற்றும் 2 வயதுக் குழந்தையுடன் உறவினர் சிக்கந்தர் தங்கியிருந்த தரமணி பாலிடெக்னிக் வளாகத்தில் தங்கியுள்ளார். அன்று இரவு, சிக்கந்தர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து புனிதாகுமாரியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட கவுரவ்குமாரை அவர்கள் வெட்டிக்கொலை செய்தனர். விஷயம் வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தில், புனிதாகுமாரியையும் 2 வயதுக் குழந்தையையும் அந்தக் கும்பல் கொடூரமாகக் கொலை செய்து உடல்களைத் தனித்தனி சாக்கு மூட்டைகளில் கட்டி வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளனர்.
குழந்தையின் உடல் கூவம் ஆற்றிலிருந்து ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில், புனிதாகுமாரியின் உடல் தரமணி குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருந்தது. அங்கிருந்து குப்பைகளை ஏற்றிச் சென்ற லாரி, உடலையும் சேர்த்து பெருங்குடி குப்பைக் கிடங்கில் கொட்டியது போலீஸாருக்குத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக 100-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீஸார், மாநகராட்சி ஊழியர்கள், மோப்ப நாய்கள் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் பல அடி உயர குப்பைக் மலைகளுக்கு இடையே தேடுதல் பணி நடந்தது.
மூன்றாவது நாளாக இன்று காலை தேடுதல் பணி தொடர்ந்த நிலையில், ஒரு வழியாகப் புனிதாகுமாரியின் சடலம் மீட்கப்பட்டது. உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கணவன், குழந்தையுடன் ஒரு பெண் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் சென்னை மக்களை உறைய செய்துள்ளது.
What's Your Reaction?

