ஜன.27ந் தேதி ஸ்பெயின் செல்லும் தமிழக முதல்வர்
தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நிகழ்ச்சிக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27ம் தேதி பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவைக்கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 2024ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை நடத்துவது, ஆளுநரை அழைப்பதா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
2024ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் முதல் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 2வது வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. விரைவில், மக்களவை தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், தமிழக அரசும் வரும் பிப்ரவரி மாதத்திலேயே தனது 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதை முன்னிட்டு, தொழில் அமைப்புகள், பல்வேறு சங்கங்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வந்ததாக பார்க்கப்படுகிறது.மேலும், வரும் 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ளார்.இந்த சூழலில், வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள், சலுகைகள் அளிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் 27ம் தேதி ஸ்பெயின் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தொழில் நிறுவனங்களை பார்வையிட உள்ளதாகவும், தொழில் நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்பெயினை தொடர்ந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணிக்க உள்ளார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு வரும் பிப்.12ம் தேதி தமிழ்நாடு திரும்புவார் என கூறப்படுகிறது.வெளிநாட்டு பயணத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்டோர் உடன் இருப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சுமார் ரூ.6,000 கோடி மதிப்பில் முதலீடுகள் ஈர்த்துள்ளதாக கூறப்பட்டது.இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்தாண்டு வெளிநாடு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?