சண்டே ஸ்பெஷல்: IPL-இல் இன்று 2 போட்டிகள்... ராஜஸ்தான் vs லக்னோ ... குஜராத் vs மும்பை !

நேற்று (மார்ச் 23) நடந்த போட்டியில் டெல்லியை வீழ்த்தி பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி, ஐதராபாத்தை 4 ரன்களில் வீழ்த்தி கொல்கத்தா அணி த்ரில் வெற்றி

Mar 24, 2024 - 10:59
சண்டே ஸ்பெஷல்:  IPL-இல் இன்று 2 போட்டிகள்... ராஜஸ்தான் vs லக்னோ ... குஜராத் vs மும்பை !

17 வது  IPL சீசன் தொடங்கி 3 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று (மார்ச் 24) 2 போட்டிகள் நடக்கவிருக்கிறது. அதில், ஜெய்பூரில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் அணியும், லக்னோ அணியும் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் குஜராத் அணியும், மும்பை அணியும் மோதுகின்றன.

முன்னதாக, நேற்று (மார்ச் 23) சண்டிகரில் மாலை நடந்த போட்டியில் டெல்லியை எதிர்கொண்ட பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, புள்ளிக்கணக்கை துவங்கியது. இப்போட்டியில் சென்னை ரசிகர்களால் சுட்டிக்குழந்தை என அழைக்கப்படும் முன்னாள் CSK வீரர், சாம் கர்ரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 63 ரன்களை குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

இதேபோல, இரவு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் ஐதராபாத்தை 4 ரன்களில் வீழ்த்தி கொல்கத்தா அணி த்ரில் வெற்றி பெற்றது. இதில் கவனம் ஈர்க்கும் வகையில் தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். எனினும் நூலிழையில் போட்டியை ஐதராபாத் அணி கைவிட்டது.

ராஜஸ்தான் vs லக்னோ (இடம் : ஜெய்பூர் - நேரம் : மாலை 3.30 மணி)

ஒரேகோட்டில் சமநிலையில் இருக்கும் அணிகள் தான் ராஜஸ்தானும், லக்னோவும். இரு அணிகள் கேப்டன்களும் (சஞ்சு, கே.எல்.ராகுல்) விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்கள் தான். அதேபோல சிறந்த படைபலம் இருந்தும் முக்கிய போட்டிகளில் சொதப்பியதால் கடந்த காலத்தில் சோபிக்க முடியவில்லை. இந்தாண்டும் இந்த நிலை நீடிக்காமல்  மாற்றம் நிகழ்ந்து வெற்றிக்கோப்பையை எட்டுவார்களா என்பது இரு அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இரு அணிகளிலும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வீரர்களில் பெரிய மாற்றங்கள் இல்லை. இதனால் வீரர்களின் செயல்பாடுகளில் தான் மாற்றங்களை எதிர்பார்க்கமுடிகிறது.

குஜராத் vs மும்பை  (இடம் : அகமதாபாத் - நேரம் : இரவு 7.30மணி)

கடந்த முறை குஜராத் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் இம்முறை மும்பை அணியை வழிநடத்துகிறார். இதேவேளையில், 5 முறை மும்பை அணிக்காக கோப்பையை வென்ற ரோகித்தின் பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக விமர்சனங்களும் வலுத்து வருகிறது. குஜராத்தை பொறுத்தவரை அதிரடி பேட்ஸ்மென் சுப்மன் கில் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார். இரு அணிகளின் கேப்டன்களிலும் மாற்றம் நடந்திருக்கும் நிலையில், புது தலைமையின் கீழ் இரு அணியின் செயல்பாடுகள் எப்படியிருக்கும் என ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow