T20 World Cup: அமெரிக்காவை ஊதித் தள்ளிய வெஸ்ட் இண்டீஸ்... இந்தியாவுக்கு அதிர்ச்சி தருமா வங்கதேசம்?
டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகளில், அமெரிக்க அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி மிக எளிதாக வென்றது.
கிங்ஸ்டன் ஓவல்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள், வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் நடைபெற்ற முதல் போட்டியில் அமெரிக்க அணி வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி, 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஆண்ட்ரிஸ் கௌஸ் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரஸ்ஸல், ரோஸ்டன் சேஸ் இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 10.5 ஒவர்களில் அபார வெற்றிப் பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஓபனர் சாய் ஹோப், 39 பந்துகளில் 8 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்து இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்தார். மற்றொரு ஓபனரான ஜான்சன் சார்லஸ் 14 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட் ஆக, அடுத்து களமிறங்கிய பூரான் 27 ரன்கள் எடுத்தார். அமெரிக்க அணி தரப்பில் ஹர்மித் சிங் 2 ஓவர்கள் வீசி 18 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
முன்னதாக நேற்று மாலை நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து அணியை போராடி வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 163 ரன்கள் எடுத்தது. ஓபனிங் பேட்ஸ்மேன் குவிண்டன் டி காக் 38 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். அதேபோல், டேவிட் மில்லரும் 28 பந்துகளில் 43 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்காவிற்கு வலு சேர்த்தார். இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
அந்த அணியின் ஹாரி ப்ரூக் அதிகப்பட்சமாக 37 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். லிவிங்ஸ்டன் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்ததால் இங்கிலாந்து அணியால் இலக்கை எட்ட முடியாமல், தென்னாப்பிரிக்காவிடம் சரணடைந்தது. இந்நிலையில் இன்று இரவு இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் இந்தியா எளிதில் வெற்றிப் பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்திய அணியில் எந்தவித மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை எனவும் சொல்லப்படுகிறது. வங்கதேசத்துடன் வெற்றிப் பெறும் பட்சத்தில் இந்திய அணி எளிதாக அரையிறுதி போட்டிக்குத் தகுதிபெறும்.
What's Your Reaction?