20 நாட்களுக்குள் 4 மாவட்டங்கள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்: கே.என்.நேருவின் அறிவிப்பு சொல்வது என்ன?

சென்னை மாநகராட்சியில் இந்த ஆண்டு ரூ.35 கோடி மதிப்பீட்டில் பள்ளி கட்டடங்கள் மேம்படுத்தப்படும் என்பதோடு, 16 புதிய பள்ளி கட்டிடங்கள் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

Jun 22, 2024 - 14:56
Jun 22, 2024 - 15:01
20 நாட்களுக்குள் 4 மாவட்டங்கள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்: கே.என்.நேருவின் அறிவிப்பு சொல்வது என்ன?

20 நாட்களுக்குள் புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மாநகராட்சியாக தரம் உயர்கிறது என்றும் சென்னை மாநகராட்சியில் வார்டு எண்ணிக்கை 200 இல் இருந்து 300 ஆக உயரும் வாய்ப்பு இருக்கிறது என்றும் சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பதிலுரையில் பேசிய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, “ஊராட்சிகளை பேரூராட்சியாகவும், பேரூராட்சிகளை  நகராட்சிகளாகவும் மாற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்க நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

யாருடைய தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலும் ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவோ நகராட்சிகளோ மாற்றப்படுவதில்லை. மக்கள் தொகை அதிகம் இருப்பதன் காரணமாகவே ஊராட்சிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. தமிழகத்தில் 490 பேரூராட்சிகள் தற்போது இருக்கின்றன.பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக அதிகரிக்கப்படும்.

தமிழகத்தில் 138 நகராட்சிகள் உள்ளன. அவை 159 ஆக உயரும் தமிழகத்தில் 25 மாநகராட்சிகள் தற்போது இருக்கும் நிலையில் அவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய நான்கு நகராட்சிகள் 20 நாட்களுக்குள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை மாநகர வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் சென்னை மாநகரில் மொத்த மக்கள் தொகை 89 லட்சமாக உள்ளது.இதில் 200 வார்டுகள் உள்ளன. ஒரு வார்டுக்கு சராசரியாக 40 ஆயிரத்திற்கும் கூடுதலாகவும் வசிக்கின்றனர். எனவே சென்னையில் வார்டுகளை அதிகப்படுத்தி, மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சியில் வார்டு எண்ணிக்கை 200 இல் இருந்து 300 ஆக உயரும் வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார்.

குறிப்பாக, சென்னை மாநகராட்சிக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் இந்த ஆண்டு ரூ.35 கோடி மதிப்பீட்டில் பள்ளி கட்டடங்கள் மேம்படுத்தப்படும் என்பதோடு, 16 புதிய பள்ளி கட்டிடங்கள் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சி பள்ளியில் 100 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என்றும், 14 புதிய பூங்காக்கள் மற்றும் ஆறு நவீன விளையாட்டு திடல்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் புதிய பாலம் மற்றும் மேம்பாலங்கள் கட்டப்படுவதோடு, 10 நீர்நிலைகள் ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் புணரமைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

முக்கியமாக, கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக ரிப்பன் கட்டட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம் ரூபாய் ரூ.75 கோடி கட்டப்படும் என்றும், அண்ணாநகர் டவர் பூங்கா சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow