பிளஸ் 1 ரிசல்ட்.. டாப் 3 மாவட்டங்கள் எவை?.. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் பள்ளி மாணவர்கள் சாதனை

பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை இன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

May 14, 2024 - 13:15
பிளஸ் 1 ரிசல்ட்.. டாப் 3 மாவட்டங்கள் எவை?.. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் பள்ளி மாணவர்கள் சாதனை


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பிளஸ் 1 பொதுத் தேர்வு மாநிலம் முழுவதும் 3,302 மையங்களில் கடந்த மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரை நடந்தது. தேர்வு எழுத 8 லட்சத்து 20,187 பள்ளி மாணவர்கள், 4,945 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8.25 லட்சம் பேர் பதிவு செய்தனர். அவர்களில் 8.16 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி 83 முகாம்களில் ஏப்ரல் 6-ல் தொடங்கி 25-ம் தேதியுடன் முடிவடைந்தது. இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டன.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை இன்று (மே 14) காலை 9.30 மணிக்கு வெளியிட்டது. தேர்வுகள் துறை இயக்குநர் சேது ராம வர்மா வெளியிட்டார். தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. 

பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவர்களில் மொத்தம் 91.17 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.69 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் மொத்தம் 87.26 சதவிகிதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in எனும் தளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 8,11,172. மாணவிகளின் எண்ணிக்கை 442681. மாணவர்களின் எண்ணிக்கை 384351 இவர்களுள் தேர்ச்சி பெற்றவர்கள் 739,539. மாணவர்களை விட மாணவிகள் 7.43 சதவீதம் பேர் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 96.02 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 
95.56 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளது. திருப்பூரில் 95.23 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளனர். அரசு பள்ளி அளவில் ஈரோடு 92.96%  அரியலூர் 92.59% திருப்பூர் 92.06%  ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

தமிழகத்தில் வேலூர் மாவட்டம் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவில்  கடைசி இடத்தை பிடித்துள்ளது..81.40 சதவிகிதத்துடன் கடைசி இடம்
அரசு பள்ளிகளை பொருத்தவரை அதிலும் வேலூர் மாவட்டம்  74.46 சதவிகிதத்துடன் கடைசி இடம் பிடித்துள்ளது. கணினி அறிவியல் பாடத்தில் 3432 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் குறைந்தபட்சமாக தாவரவியல் பாடத்தில் இரண்டு மாணவர்கள் மட்டுமே நூற்றுக்கு நூறு சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்

ஆங்கிலத்தில் 13 பேரும் இயற்பியல் பாடத்தில் 696 மாணவர்களும் வேதியியல் பாடத்தில் 493 மாணவர்களும் கணித பாடத்தில் 779 மாணவர்களும் பொருளியல் பாடத்தில் 741 வணிகவியல் பாடத்தில் 620 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
பதினோராம் வகுப்பு மாணவர்கள் வரும் 16ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விடைத்தாள்  நகல் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை 2ம் தேதி துணைத்தேர்வு நடைபெறும் எனவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

இதனிடையே மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் குரு மகா சன்னிதானத்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow