நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது தைய தையா... மலை ரயிலில் குதூகலப் பயணம்..
கோடை சீசனுக்காக ஊட்டிக்கு படையெடுத்து செல்லும் சுற்றுலாப் பயணிகள், சிறப்பு மலை ரயிலில் குடும்பத்தோடு உற்சாகமாக பயணித்தனர்.
மலைகளின் ராணி என்ற பெயருக்கு ஏற்ப எங்குப் பார்த்தாலும் கண்களைக் கொள்ளையடிக்கும் அளவிற்கு இயற்கைகளால் சூழப்பட்டிருக்கும் இடம் தான் ஊட்டி. மற்ற இடங்களைப் போன்று கார்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்களில் பயணித்துச் செல்லக்கூடிய வசதிகள் இருந்தாலும், ஊட்டிக்குச் செல்லக்கூடிய சுற்றுலாப் பயணிகளின் தேர்வு மலை ரயில் பயணம் தான். சுற்றுலாவிற்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் வழக்கமான ரயில்களைப் போல் இல்லாமல் இயற்கையை ரசிப்பதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
எங்குப் பார்த்தாலும் மலைகள், அருவிகள், காடுகள், ஓடைகள், வன விலங்குகள் என இயற்கையின் அற்புதங்களை ரசிப்பதற்கு ஏற்ற வகையில் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயில் ஒவ்வொரு ரயில் நிலையம் மட்டுமல்ல, இயற்கை எழில் கொஞ்சக்கூடிய அனைத்து இடங்களிலும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை நின்று செல்லும். இது ஒவ்வொரு பயணிகளும் சற்று நேரம் கீழே இறங்கி இயற்கையை ரசிப்பதற்கும், செல்பி எடுப்பதற்கும் வசதியாக இருக்கும்.
ஊட்டி மலை ரயிலுக்கென்று பல சுவாரசியங்கள் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் மலை ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். இதற்காக, கோடை சீசனையொட்டி கடந்த மார்ச் 29-ம் தேதி முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
நாள்தோறும் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் மலை ரயில், முற்பகல் 11.55 மணிக்கு உதகை சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையத்திற்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு சிறப்பு மலை ரயிலும் இயக்கப்படுகிறது. இதேபோல் உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மேலும் உதகை - கேத்தி இடையே திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.45, 11.30 மற்றும் பிற்பகல் 3.00 மணிக்கு இயக்கப்படுகிறது.
இந்நிலையில் கோடை விடுமுறையையொட்டி தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையத்திற்கு படையெடுத்து அங்கிருந்து மலை ரயில் மூலம் ஊட்டிக்கு செல்கின்றனர்.
What's Your Reaction?