தமிழ் புத்தாண்டு நாளில் தமிழ்நாட்டில் மழை பெய்யுமா? வானிலை ஆய்வு மையம் சொன்ன ஜில் தகவல்
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் தமிழ் புத்தாண்டு தினமான நாளைய தினமும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வட தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கொடைக்கானல், உதகையில் கொட்டித்தீர்த்த கனமழையால் வறட்சி நீங்கி குளுமை பரவியுள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழையால் பூமி குளிர்ந்துள்ளது. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் சித்திரை திருவிழா கொடியேற்றம் முடிந்த உடனே மண் குளிர மழை கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில் இன்று முதல் 15ஆம் தேதி வரைக்கும் தென் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை குறையக்கூடும். அதன்பின்னர் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி ஃபாரன்ஹீட், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும். தென்னிந்தியப் பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும், குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், 14, 15ஆம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16, 17, 18 தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சேர்வலாறு அணையில் 8, நீலகிரி மாவட்டம் ஆதார் எஸ்டேட் ஆகிய இடங்களில் தலா 7, மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
What's Your Reaction?