தருமபுரி: வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

இருவரும் ஆள் இல்லாத இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

Nov 20, 2023 - 12:32
Nov 20, 2023 - 13:27
தருமபுரி: வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

தருமபுரி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகை மற்றும் ரூ.3 இலட்சம் கொள்ளைடயிக்கப்பட்ட சம்பவத்தில், இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 30 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், ஒட்டப்பட்டி அடுத்த வள்ளுவர்  நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.இதில் சீனிவாசன் என்பவர் வீட்டில் சையின், ஆரம், பிரேஸ்லெட், மோதிரம் என 24 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 இலட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

இதேப்போல் அருகில் இருந்த கதிரவன் என்பவர் மனைவியின் பிரசவத்திற்காக சேலம் சென்றிருந்த நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து செயின், தோடுகள், தங்க நாணயம் என 8 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அதியமான்கோட்டை காவல் துறையினர் நேரடியாக ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த விசாரணையில் சந்தேகப்படும் படியான இரண்டு நபர்கள் சுற்றி திரிந்தது தெரியவந்தது.அப்போது அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், வாணியம்பாடியை சேர்ந்த திருமால் மற்றும் நாங்குநேரியை சேர்ந்த முத்துபாலன் என்பது தெரியவந்தது.தொடர்ந்து நடத்திய விசாரணையில் இருவரும் ஒட்டப்பகுதியில் ஆள் இல்லாத இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரும் கொள்ளையடித்து வைத்திருந்த 30 சவரன் தங்க நகைகளை அதியமான்கோட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

-பொய்கை கோ.கிருஷ்ணா

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow