சென்னையில் ஆக்கிரமிப்பை அகற்ற கோடியில் லஞ்சம் கேட்ட தாசில்தார்.. தட்டித் தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை
சென்னையில் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட தாசில்தார் மற்றும் காவலர் கைது செய்யப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்ய வந்தபோது பாஜக நிர்வாகி கராத்தே தியாகராஜன் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, சோழிங்கநல்லூரில் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சமூக ஆர்வலர் பொன் தங்கவேல் என்பவர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பொன் தங்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியபோதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் மனமுடைந்த பொன் தங்கவேல், இதுகுறித்து தெற்கு மண்டல துணை ஆணையர் அமித்திடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் 3 நாட்களில் ஆக்கிரமிப்பை அகற்றுவதாக உறுதி அளித்ததுடன், அந்தப் பணியை தாசில்தார் சரோஜா கண்காணிப்பார் எனவும் கூறினார்.
இந்த நிலையில், தாசில்தார் சரோஜா “அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றினால் அருகில் உள்ள நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயரும். எனவே ஆக்கிரமிப்பை ஒட்டிய நில உரிமையாளர்களிடம் பணத்தை வசூலித்து ஒரு கோடி ரூபாயை என்னிடம் கொடுங்கள் என பொன் தங்கவேலிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொன் தங்கவேல், எவ்வித பதிலையும் அளிக்காமல் காலம் கடத்தி வந்தார். இதையடுத்து சரோஜா அவரை வீட்டிற்கே அழைத்து “20 லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும். முதற்கட்டமாக 5 லட்சம் ரூபாய் தாருங்கள். ஆக்கிரமிப்பு அகற்றிய பிறகு முழு தொகையை பெற்றுக் கொள்கிறேன்” எனக் கூறியதாக தெரிகிறது.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பொன் தங்கவேல், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய 3 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு அடையாரில் உள்ள மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார் பொன் தங்கவேல். அப்போது காவலர் அருண்குமாரிடம் பணத்தை கொடுக்குமாறும், அவர் அந்தப் பணத்தை ஆயுதப்படை தலைமைக் காவலராக பணிபுரியும் தனது கணவர் பிரவீனிடம் கொடுத்துவிடுவார் எனவும் சரோஜா கூறியதாக சொல்லப்படுகிறது.
ஆனால் அவரிடம் பணத்தை தர மறுத்த நிலையில், அருண்குமார் போனில் தொடர்புகொண்டு “நானும் மதுரைக்காரன் தான் என்னை நம்பலாம்” என கூறினார். இதையடுத்து அவரிடம் பணத்தைக் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அருண்குமாரை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து தாசில்தார் சரோஜா அறையில் சோதனை மேற்கொண்டு அவரையும் கைது செய்தனர்.
அப்போது அங்கு வந்த பாஜக பிரமுகர் கராத்தே தியாகராஜன், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தென் சென்னை தேர்தல் அலுவலகமாக இருக்கும் இடத்தில் தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி சோதனை நடத்தப்படுவதாகவும் பாஜக வேட்பாளர்களின் தகவல்களை எடுத்துச் செல்ல வந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக தாசில்தார் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், இந்த விவகாரத்தில் கராத்தே தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்து பேசியது போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது..
What's Your Reaction?